குமரி மாவட்டத்தின் குளச்சல் பகுதியில் உள்ள வாணியக்குடி எனும் மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்வ மேரி அம்மாள் என்ற மூதாட்டி, குளச்சல் பகுதியில் மீன் விற்பனை செய்துவிட்டு தினமும் பேருந்தில் வீடு செல்வது வழக்கம். தலைச்சுமையாக மீன்களை விற்றுவிட்டு மாலை வேளையில் அரசு பேருந்தில் பயணித்துவந்த மூதாட்டி செல்வ மேரி அம்மாள், மீன் விற்பனை முடிந்து பேருந்தில் ஏறிய நிலையில் பேருந்து நடத்துநர், மீன் விற்றதால் நாற்றம் வருகிறது எனக் கூறி பேருந்திலிருந்து மூதாட்டியை இறக்கிவிட்டுள்ளார்.
என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த மூதாட்டி, பேருந்து நிலையத்தில் உள்ள நேர காப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று தனது ஆற்றாமையைக் கொட்டித் தீர்த்துள்ளார். “எத்தனை முறை இதுபோல் கீழே இறக்கிவிட்டு நடந்தே போயிருக்கேன்... இதெல்லாம் ஒரு நியாயமா நீதியா” எனக் கண்ணீர் விட்டார். இதற்கும் அந்தப் பேருந்து ஓட்டுநர் நேரக் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் வாயிலில் ஒன்றும் தெரியாததுபோல் நின்றுகொண்டிருந்தார். மூதாட்டியின் இந்த வேதனைக்குரல் குளச்சல் பேருந்து நிலையத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த சம்பவம் உடனடியாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அரசு பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், நேரக்காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட அந்த மூதாட்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, "என்னை பேருந்திலிருந்து இறக்கிவிட்டவர்களை மன்னித்துவிட வேண்டும், தண்டனை கொடுத்தால் அது அவர்களின் குழந்தைகளைப் பாதிக்கும். இனி அப்படி செய்யக் கூடாது, உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.