ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலர் சந்தை பிரபலமானது. கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் உற்பத்தி குறைந்து சந்தை மற்றும் மார்க்கெட்டுக்கு வரும் பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் இயங்கும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு ஏல முறையில் விலை நிர்ணயம் செய்யப்படும். ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் இந்தப் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதால் மல்லிகை பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. 23 ந் தேதி (இன்று) ஒரு கிலோ மல்லிகை பூ ரூபாய் 2,117 க்கு விற்பனையானது. இதேபோல் முல்லை பூ 1120 ரூபாய்க்கும், காக்கடா 900 ரூபாய்க்கும், கோழி கொண்டை பூ 145 ரூபாய்க்கும், ஜாதிமுல்லை 750 லிருந்து 900 ரூபாய்க்கும், சம்பங்கி 80 ரூபாய்க்கும் விற்பனையானது. அனைத்து வகை பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் மலர்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பூக்களின் வாசத்தை விசுவாசமாக கொண்ட பெண்கள் விலையை கேட்டு ஏக்கத்துடன் ஏமாற்றத்துடன் விலகுகிறார்கள்.