மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
தொடர்ந்து மூன்று நாட்களாக அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பாதுகாப்பு கருதி இன்று (04/04/2024) அந்த உள்ள 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
சிறுத்தை தேடுதல் வேட்டையில் முதல் நாள் கேமராவில் சிக்கிய அந்த சிறுத்தை இரண்டாவது நாள் சிக்கவில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் நேற்று இரவு வனத்துறையினர் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பின் தொடர்ந்ததால் சிறுத்தையை கண்டுபிடிக்கும் பணியில் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், எனவே சிறுத்தையை பிடிக்கும் வரை வனத்துறையினரை பொதுமக்கள் பின் தொடர்ந்து இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சிறுத்தையை தேடும் பணிக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் வனத்துறை முடிவு செய்துள்ளது. கூறைநாடு, செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு என பல இடங்களுக்கு தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பது வனத்துறையினருக்கு அதனை பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொது மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், 'தேர்தல் பணியை விட சிறுத்தையை பிடிப்பதே முக்கியம். ஏனென்றால் வாக்காளர்கள், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வைப்பது அரசின் கடமை' என தெரிவித்தார்.