
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் கட்டிடம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ரங்கையா கார்டன் பகுதியில் 'ரியல் டவர்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இது வணிக வளாகம்போல செயல்பட்டு வரும் கட்டிடமாகும். இதில் ஐடி நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட பல செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் மாடியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் திடீரென கட்டிடத்திற்கு மேல் மொட்டை மாடிபகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. மாடியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக கட்டிடத்திலிருந்த பணியாளர்கள் அனைவருமே உடனடியாக வெளியேறினர்.
உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கட்டிடத்தின் உரிமையாளர்கள் தீ மற்ற கட்டிடத்திற்கு பரவாமல் இருக்க அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தகவல் தெரிவித்து பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் தீயணைப்பு துறையினர் யாரும் அங்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அண்மையில் இதேபோல் எல்ஐசி கட்டிடத்தின் மொட்டை மாடியிலும் தீ விபத்து ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.