தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மேலும் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சென்னை ட்ரெக்கிங் கிளப் என்ற மலையேற்றப் பயிற்சி அமைப்பு, மலையேற்றப் பயிற்சிக்காக 39 பேர் கொண்ட குழுவை தேனி மாவட்டம் குரங்கணி பகுதிக்கு அழைத்துச் சென்றது. வனப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். தீக்காயம் அடைந்தவர்களில் 9 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிணத்துக்கடவை சேர்ந்த திவ்யா திருப்பூர் மாவட்டம் தேக்கம்பாளையத்தைச் சேர்ந்த சக்தி கலா, சென்னையைச் சேர்ந்த அனுவித்யா, ஜெயஸ்ரீ ஆகியோர் 90 முதல் 100 சதவீத தீக்காயங்களுடனும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
தீ விபத்தில் பலியான 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். போடி காட்டுத் தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், காட்டுத் தீயில் சிக்கியவர்களை காப்பாற்ற தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், விமானப்படை, கமாண்டோக்கள் மற்றும் உள்ளூர் மாவட்ட நிர்வாகத்தை பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.