சேலத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் உள்பட இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் சாதாரண வைரஸ் காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இதற்கென தனி சிகிச்சைப்பிரிவும் தொடங்கப்பட்டு உள்ளது. காய்ச்சலின் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் கொசு ஒழிப்பு, சாக்கடை கால்வாய்கள் சுத்தப்படுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பன்றி காய்ச்சலால் இரண்டு பேர் பலியான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
சேலம் குகை சிவனார் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம்மாள் (39). பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (நவ. 3) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல், சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (75) என்பவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த பத்து நாள்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.