சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரைக் கடந்த 25ஆம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி சர்ச்சையானது. இதையடுத்து, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமோ, எஃப்.ஐ.ஆர் நகலையோ இணையத்தளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.
இத்தகைய சூழலில் தான் பெண் வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், ‘இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் குறைபாடு இருப்பதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்ட போதிலும், பின்னணியில் யாரோ ஒருவர் ‘சார்’ இருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அவர் யார் என்ற விவரம் இதுவரையிலும் தெரியவில்லை. எனவே, இந்த வழக்கைப் பொறுத்தவரை காவல்துறை விசாரித்தால் சரியாக இருக்காது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. அதன்படி உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை செயலாளர், டிஜிபி, மாநகர காவல்துறை ஆணையர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஆகியோர் இன்று மதியம் 2 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்ற விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மதியம் 3 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தங்களையும் ஒரு மனுதாரராக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ் என்பவரும் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை எற்றுகொண்ட நீதிபதிகள் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட இந்த வழக்கிற்குத் தலைமை நீதிபதியிடம், ‘அனுமதி பெற வேண்டியுள்ளது’ தெரிவித்தனர். அப்போது அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் காணொளி மூலம் ஆஜராகி வாதிடுகையில், “இது தொடர்பாக விரிவான அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், “இந்த வழக்கில் எப்.ஐ.ஆர். எவ்வாறு வெளியானது?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில், “முதல் தகவல் அறிக்கை காவல்துறை சார்பில் வெளியிடப்படவில்லை. இணையதளத்தில் தான் தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் அதனையும் முடக்கப்பட்டுள்ளது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. மேலும் இது தொடர்பாக யாரேனும் வழக்கு தொடர வேண்டும் என்றால் மாலை 04.45 மணிக்குள் தாக்கல் செய்யவும். அதனைத் தொடர்ந்து சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்து நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.