தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் நெல் என்பது மாறி தென்னை விவசாயமே பிரதானமாக மாறியுள்ளது.
ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கான தேங்காய்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தனர். கஜா புயல் தென்னை விவசாயிகளுக்குப் பேரிடியாக இறங்கி விளையாடியது. 80% தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தது. சில வாரங்கள் சோகத்திலிருந்த தென்னை விவசாயிகள் மீண்டும் தோட்டங்களில் இறங்கி கடினமாக உழைத்ததால் மீண்டும் தேங்காய் உற்பத்தியைப் பெருக்கியுள்ள நிலையில் தற்போது தேங்காய் விலை ரூ.7 க்கு கீழே சரிந்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் கடன் மேல் கடன் வாங்கி வட்டிகூட கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் திரண்ட ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகள் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ஆளுக்கொரு தேங்காயுடன் ஊர்வலமாகச் சென்று பேருந்து நிலையம் அருகே 500- க்கும் மேற்பட்ட தேங்காய்களைச் சாலையில் உடைத்தனர்.
மத்திய, மாநில அரசுகளே உரித்த தேங்காய்களுக்கு கிலோ ரூபாய் 50- க்கும், கொப்பரை தேங்காய்க்கு கிலோ ரூபாய் 150- க்கும் கொள்முதல் செய்ய வேண்டும், ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாகத் தேங்காய் எண்ணெய்களை வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.