திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரியும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் விவசாயிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக நடைபெறாமல் இருந்த விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டம், தேர்தல் முடிவிற்கு பிறகு நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர், அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரியும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் ஒருமித்த குரலில் கோஷமிட்டனர்.
பின்னர் இதை தீர்மானமாக நிறைவேற்றி மாவட்ட ஆட்சியரிம் வழங்கினர். குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் "தாய்மண்" பாராம்பரிய வேளாண் உற்பத்தி நிறுவனத்தின் சார்பில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பாராம்பரிய விதை நெல் வழங்கப்பட்டன.