காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்து இனிமேல் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பெட்ரோலியம் உள்ளிட்ட எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்படமாட்டாது என்று அறிவித்தது.
ஆனால் தமிழ்நாடு அரசின் உத்தரவுகளை மதிக்காத மத்திய அரசு மீண்டும் நிலக்கரி எடுக்க அனுமதி அளித்துள்ளது. நிலக்கரி மட்டுமின்றி முதலில் மீத்தேன் பிறகு நிலக்கரி, ஹைட்ரோ கார்பன் என அத்தனை எரிபொருளையும் விளைநிலங்களில் ஆழ்துளையிட்டு உறிஞ்சி எடுக்கும் திட்டம் தயாராகிவிட்டது. டெல்டா மாவட்டங்களில் வடசேரி, உள்ளிக்கோட்டையை மையமாக வைத்து முதல்கட்டமாக 11 கிராமங்களிலும் தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள் அடுத்தடுத்த மாவட்டங்களுக்கும் நிலக்கரி எடுக்க விரிவாக்கம் செய்ய உள்ளனர்.
இந்த அறிவிப்பைக் கண்டு ‘மண்ணை மலடாக்க நினைக்காதே!’ என வெகுண்டெழுந்த டெல்டா மாவட்ட விவசாயிகளை, உள்ளிக்கோட்டை கிராமத்தில் மாலை 4 மணிக்கு முதல்கட்ட ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு பி.ஆர்.பாண்டியன் அழைத்திருக்கிறார். இந்த முதல்கட்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பார்கள் என்று கூறப்படும் நிலையில் இன்று முதல் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம் போல நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும் தொடர் போராட்டமாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு பி.ஆர்.பாண்டியன், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு ஆய்விற்குப் பிறகு மாவட்ட ஆட்சியர்கள் எப்படி ஒப்புதல் கொடுத்தார்கள்? அதானி நிறுவனத்திற்கு நிலக்கரி எடுக்க ஒப்பந்தம் கிடைத்துள்ள நிலையில் அதே பெயரில் டெல்டா மாவட்டங்களில் பலரும் உள்ளே நுழைய காத்திருக்கின்றனர். இதனை சாதாரணமாக விடமாட்டோம்.” என்றார்.