கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அம்மாபேட்டை கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்காலிகமாகச் செயல்பட்டு வருகிறது. இதில் அம்மாபேட்டை, வேளக்குடி, வல்லம்படுகை, பழைய நல்லூர், அகரநல்லூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளைந்த குருவை நெல்களை அறுவடை செய்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்கு எடுத்து வந்தனர்.
கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 300 மூட்டைகள் மட்டுமே எடுப்பதால் பல ஆயிரம் மூட்டை நெல்கள் தேங்கியுள்ளது. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சாக்கு தட்டுப்பாடு நிலவுவதால் நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் எப்போது மழை பெய்யும் என்ற பயத்தில் நெற்களை வயிற்றில் கட்டி வைத்துள்ளது போல் விவசாயிகள் பயத்தில் உள்ளனர். சாக்கு தட்டுப்பாடு இல்லாமல் அரசு, விவசாயிகளின் நெற்களை விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.