Skip to main content

Exclusive: ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனையில் அதிர்ச்சி முடிவு - அதிரடிக்கு தயாராகும் சிறப்பு புலனாய்வு குழு

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

EXCLUSIVE; 'Ramajayam  case; Shocking result of fact-finding probe - Special Investigation Team ready for action

 

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருவளர்சோலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தினாலும், சிபிஐ வரை விசாரித்தும் கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் விசாரணை நீண்டு வருகிறது. இந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சி வந்ததும் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

 

குற்ற வழக்கு விசாரணைகளில் கைதேர்ந்த டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் போன்ற போலீசார் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் பங்கேற்றனர். பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு சம்பவம் நடந்த நாளில்; சம்பவம் நடந்த பகுதியில் இயங்கிய செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு அவர்களில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தவர்களை விசாரணைக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

 

இறுதியாக 13 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றத்தில் அனுமதிக்காகக் காத்திருந்தனர். அதில் ஒருவர் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதிக்காததால், மீதமுள்ள திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேஷ், தினேஷ், சத்யராஜ், கலைவாணன், செந்தில், திலீப், சுரேந்தர், சாமிரவி, சிவா, ராஜ்குமார், மாரிமுத்து ஆகிய 12 பேரின் சம்மதத்துடன் கடந்த ஜனவரி 18ந் தேதி முதல் 20ந் தேதி வரை 3 நாட்கள் உண்மை கண்டறியும் சோதனையில் நிபுணத்துவம் பெற்ற தடயவியல் நிபுணர் மோசஸ் தலைமையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

 

சோதனையின்போது ராமஜெயம் கொலை சம்பந்தமாக மட்டுமே கேள்விகள் கேட்க வேண்டும். வேறு வழக்குகள் பற்றிய கேள்விகள் கேட்கக் கூடாது. சோதனையின்போது வழக்கறிஞர்கள் உடனிருக்கவும் நீதிமன்ற அனுமதி பெற்றிருந்தனர். அதேபோன்றே கேள்விகள் தயாரிக்கப்பட்டு கேட்கப்பட்டது. கேள்விகள் கேட்கும்போது அவர்களின் பதிலில் உண்மை உள்ளதா என்பதை அவர்களின் இருதயத் துடிப்பு மற்றும் மூளையின் செயல்பாடுகளின் அளவீடுகளை வைத்து கணக்கிடப்படும். 3 நாட்களில் நடந்து முடிந்த சோதனைக்குப் பிறகு சில நாட்களுக்கு முன்பு சோதனையின் அறிக்கை வந்துள்ளது.

 

அந்த அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அதாவது, திலீப் தவிர மற்ற 11 பேரும் உண்மைத்தன்மை அற்றவர்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இதயத் துடிப்பு மற்றும் மூளையின் செயல்பாடு மாறுபட்டுள்ளதால் உண்மையை மறைக்கிறார்கள் என்பதை காட்டியுள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் அடுத்தகட்ட அதிரடிக்கு தயாராகி உள்ளனர். அவர்களின் அதிரடி நடவடிக்கை என்ன என்பது சில நாட்களில் தெரியவரும்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த இளம்பெண்; முன்னாள் காதலனின் வெறிச்செயல்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Incident happened on A young woman preparing for marriage in madhya pradesh

மத்தியப் பிரதேச மாநிலம், டாடியா பகுதியைச் சேர்ந்தவர் காஜல் அஹிர்வார்(22). இவருக்கும், இளைஞர் ஒருவருக்கு நேற்று (23-06-24) திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணப்பெண்ணான காஜல் திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு மேக்கப் போடுவதற்காக உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள அழகு நிலையத்திற்கு தனது சகோதரியுடன் வந்தார். மேலும், அந்த அழகு நிலையத்திற்கு உள்ளே சென்று காஜல் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார்.  அப்போது, அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகத்தில் முகமூடி அணிந்து வெளியே நின்று கொண்டு, காஜலிடம் வெளியே வருமாறு கூறியுள்ளார். ஆனால், அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அந்த நபர், ‘வெளியே வா காஜல், நீ எனக்கு துரோகம் செய்துவிட்டாய்’ என்று கூறியதாக கூறப்படுகிறது. 

ஆனாலும், அந்த பெண் வெளியே வர மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு காஜலை சரமாரியாக சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த காஜல் மயங்கி கீழே விழுந்தார். இதனிடையே, காஜலை துப்பாக்கியால் சுட்ட அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த காஜலின் சகோதரி, காஜலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காஜல் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், இளம்பெண்ணை சுட்டுக்கொலை செய்தவர் தீபக்.  அந்தப் பெண் வசிக்கும் அதே ஊரில்தான் அவரும் வசித்து வந்துள்ளார். தீபக்கும், காஜலும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, காஜலுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த தீபக், காஜலை சுட்டுக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இளம்பெண்ணை சுட்டுக் கொன்ற தீபக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருமணம் நடைபெறுவதற்கு முன்பு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கள்ளச்சாராய வியாபாரி கொடுத்த வாக்குமூலம்; மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட உடல்

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Confession given by liquor dealer; The body was exhumed again


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த ஜெயமுருகன் என்பவர் கடந்த 18 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவர் விற்பனை செய்த சாராயத்தை வாங்கி குடித்துள்ளார். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனால் மீண்டும் உடலை வீட்டுக்கு எடுத்து வந்த ஜெயமுருகனின் உறவினர்கள் அவரது உடலை மறுநாள் அடக்கம் செய்தனர். ஆனால் ஜெயமுருகன் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தது அவருடைய வீட்டாருக்கு தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் உயிரிழப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் தொடர்ந்து கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்த நிலையில் ராமர் என்பவரையு விசாரித்த போது அதே ஊரில் உயிரிழந்த ஜெயராமன், ஜெயமுருகன் உட்பட பலர் தன்னிடம் சாராயம் வாங்கிக் குடித்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதனையடுத்து ஜெயராமன், ஜெயமுருகன் ஆகியோர் வீட்டிற்குச் சென்ற போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியதால்தான் உயிரிழந்தார்களா என்பதை உறுதிசெய்ய உடல்கள் தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று மதியம் வருவாய் வட்டாட்சியர் கமலக்கண்ணன், காவல் ஆய்வாளர் கந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்ட உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.