டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலை மீண்டும் துவங்கியிருக்கிறது. தொடர் மழையால் பாதிப்படைந்த நெற்பயிரைக் கண்டு மனமுடைந்து விவசாயி ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை வரலாறு காணாத வகையில் வழக்கத்தைவிட அதிகமாகவே கொட்டித் தீர்த்தது. முறையான பாசன வாய்க்கால்களும், வடிகால்கள் தூர்வாரப்படாமலும் போனதால் மழைநீர் வடியாமல் வயல்கள் முழுவதும் தண்ணீரில் முழுகிவிட்டது. இதனால் பயிர்கள் நாசமானது. எனவே, பாதிப்படைந்த விவசாயிகள் நிவாரணம் வழங்கக் கோரி தினசரி பலவிதப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ மௌனம் சாதித்து வருகிறார். நாகை மாவட்டத்தில் மட்டும் அறுவடைக்குத் தயாராக இருந்த 88 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது.
இந்நிலையில் நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள மோகனாம்பாள்புரத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ்பாபு, 10 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்திருந்தார். தொடர் மழை காரணமாக இவர் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமானது. இதனால் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனையும், கந்துவட்டிக்காரர்களிடம் வாங்கிய கடனையும், எவ்வாறு செலுத்தப் போகிறோம், என்பது தெரியாமல் மனமுடைந்த விவசாயி ரமேஷ்பாபு, இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற எர்ணாகுளம் அதிவிரைவு இரயிலில் ஆவராணி என்கிற இடத்தில் ரயில்முன் பாய்ந்து தலை சிதறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து இவரது உடலைக் கைப்பற்றிய ரயில்வே போலீசார் நாகை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயிர் பாதிப்பால் விவசாயி ஒருவர் மனமுடைந்து ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாகையில் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.