Skip to main content

'என் பெயரிலேயே ஃபேக் ஐ.டி; லெப்டினண்ட் கர்னல் என மோசடி' - முன்னாள் டிஜிபி ரவி பரபரப்பு

Published on 13/07/2023 | Edited on 13/07/2023
nn

 

முன்னாள் டிஜிபியும் காவல் ஆணையருமான ரவி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசுகையில், 'என்னுடைய போட்டோவை பயன்படுத்தி என்னுடைய தகவல்களைப் பயன்படுத்தி ஒரு ஃபேக் அக்கவுண்ட் உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு போலியான முகநூல் கணக்கை உருவாக்கி அதன் மூலமாக என்னுடைய நண்பர்களுக்கு தகவல் கொடுக்கிறார்கள். நண்பர்கள் நானே தகவல் கொடுத்ததாக நினைக்கிறார்கள்.

 

'நான் ஒரு ஆர்மி அதிகாரியிடம் இருந்து பர்னிச்சர் வாங்கி இருக்கிறேன். ரொம்ப சீப்பான விலையில் கொடுக்கிறார்கள். அதை நீங்களும் வாங்குங்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் உங்களை தொடர்பு கொள்வார்' என சொல்வதாக மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. அதை நம்பிய நிலையில் அந்த நபரை காண்டாக்ட் பண்ணியவுடன் லெப்டினண்ட் கர்னல் என ஒருவர் பேசியுள்ளார். அவர் இந்தியில் மட்டும் பேசுகிறார். ஆங்கிலத்தில் பேச தெரியவில்லை. இதனால் சந்தேகமடைந்த என்னுடைய நண்பர் எனக்கு நேரடியாக தொடர்பு கொண்ட பொழுது நான் ஆய்வு செய்ததில் அது போலியான கணக்கு என தெரிந்தது. உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையில் தகவல் தெரிவித்துவிட்டேன்.

 

எனது சார்பில் மெட்டா நிறுவனத்திற்கும் இதுபோன்று போலியான கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்துவிட்டேன். இந்த மாதிரி போலியான கணக்குகளை உருவாக்குவதன் மூலமாக பணம் கையாடல் செய்வதுதான் இந்த குற்றவாளிகளுடைய வேலை. இதில் ஒரு போலிஸ் அதிகாரியான என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் என்றால் என்னுடைய புகைப்படத்தை போடுவதால் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும். ஒரு போலீஸ் அதிகாரி படத்தை வைத்து போலி தனக்கு உருவாக்க முடியாது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கும் என்ற கருத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள் இந்த சைபர் குற்றவாளிகள்.

 

மக்கள் என்ன நினைப்பார்கள், நிச்சயமாக ஒரு போலீஸ் ஆபீஸர் படத்தை வைத்து ஃபேக் ஐடி உருவாக்குவதற்கான தைரியம் யாருக்கும் இருக்குமா என நினைப்பார்கள் என்ற எண்ணத்தை பயன்படுத்தி தான் இந்த மாதிரி ஒரு போலி கணக்கை உருவாக்கி உள்ளார்கள். நான் சொல்வது என்னவென்றால் இதுபோன்று முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வருகின்ற  பணம் சம்பந்தப்பட்ட, பண பரிவர்த்தனை சம்பந்தப்பட்ட எந்த ஒரு தகவல் வந்தாலும் அதை நம்பக் கூடாது. எந்த ஒரு போலீஸ் அதிகாரியோ, எந்த ஒரு நண்பரோ எனக்கு நீங்கள் பணம் கொடுங்கள் என மெசேஜ் கொடுப்பது அல்லது இந்த பர்னிச்சர் வாங்குங்கள் என்று சொல்வது இதையெல்லாம் நம்ப வேண்டாம்'' என்றார்.

 

அண்மைக்காலமாகவே மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பல அதிகாரிகளின் பெயரில் ஃபேக் ஐடிகள் உருவாக்கப்பட்டு பணம் பறிக்கும் முயற்சிகள் நடந்தது. அந்தந்த அதிகாரிகளே இதுபோன்ற மோசடிகள் குறித்து இதுபோன்ற தகவலை நம்ப வேண்டாம் என பொதுவெளியில் தெரிவித்தனர். இந்நிலையில் அதன் அடுத்தகட்டமாக மோசடிகளை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி பெயரிலேயே ஃபேக் ஐ.டி உருவாக்கப்பட்டு மோசடிக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமலாக்கத்துறை சம்மனுக்கு அவகாசம் கேட்ட தமன்னா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
tamanna asked for time to summon the enforcement department regards ipl

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமன்னாவிற்கு இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியது. 

இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக தமன்னா அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர், மும்பையில் தற்போது இல்லை என சைபர் கிரைம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் பின்னர் வேறொரு நாளில் ஆஜராகவுள்ளதாக கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.