கடலூர் நகரில் உள்ள மோகன் நகரைச் சேர்ந்தவர் 24 வயது சந்தோஷ். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது வாஞ்சிநாதன்.
இவர்கள் இருவருக்கும் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் சந்தோஷ் வாஞ்சிநாதனை தேடி கடலூரில் இருந்து குயிலாப்பாளையம் வந்துள்ளார். அப்போது வாஞ்சிநாதன் வீட்டில் இல்லை. அவரை செல்ஃபோன் மூலம் சந்தோஷ் தொடர்பு கொண்டபோது அப்பகுதியில் ஒரு இடத்தில் இருப்பதாகவும், அங்கே வருமாறு சந்தோஷை வாஞ்சிநாதன் அழைத்துள்ளார்.
அவரை தேடி சந்தோஷ் சென்றபோது, ஒரு முந்திரி தோப்பில் வாஞ்சிநாதனுடன் மேலும் மூன்று நண்பர்கள் பதுங்கியிருந்தனர். வாஞ்சிநாதன் மற்றும் அவனது கூட்டாளிகள் லோகேஸ்வரன், வெற்றி, அருண் ஆகியோர் சந்தோஷை கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த அரை பவுன் செயின், 2000 பணம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு துரத்தியுள்ளனர்.
ஃபேஸ்புக் நண்பனை ஆசையோடு சந்திக்க வந்த சந்தோஷ், அந்த நண்பன் திருடனாக மாறியதைக் கண்டு அதிர்ச்சியில் மன வேதனை அடைந்து, ஆரோவில் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீசார், ஃபேஸ்புக் நண்பன் வாஞ்சிநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட மூவரையும் கைது செய்துள்ளனர்.
ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் நண்பர்களாக நடித்து அதிலும் கொள்ளையடிக்கும் வித்தியாசமான முறையில் மேற்படி இளைஞர்கள் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.