
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் இன்று திமுக தொண்டர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் என்பதால் அதனை திமுகவினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களைச் சந்தித்தார். வந்திருந்த தொண்டர்களுக்கு மஞ்சப்பையுடன் மரக்கன்று வழங்கப்பட்டது. தொண்டர்களும் சால்வைகள், புத்தகங்கள், மலர்கொத்துக்களை முதல்வருக்கு பரிசளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்புகளில் இருந்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் துணை மேயர் டாக்டர் மோனிகா தேவேந்திரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “பிறந்தநாள் வாழ்த்துகள் முதல்வர் ஸ்டாலின் அய்யா; ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.