ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கி நிர்வாகம் சுரண்டுவதால் மாணவியர்கள் உதவித்தொகையை பெற்று பயன்பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காகவும், அவர்களின் பள்ளி சேர்க்கையை 100 விழுக்காடு உறுதிப்படுத்திடவும் பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் கல்வி பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி ஊக்க உதவித் தொகையாக வருடத்துக்கு ரூபாய் 500 வழங்கப்படுகிறது.
இத்திட்டம் 2011-12ஆம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகள் பயன்பெறத் தக்க வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கென ஆண்டுதோறும் பல கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாணவியர் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு 6ஆம் வகுப்பில் கல்வியை தொடரும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் வருடத்துக்கு ரூபாய் ஆயிரமும், ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு வருடத்துக்கு ரூபாய் 1500ம் வழங்கப்படுகிறது. இத்திட்டமும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், மேற்கண்ட கல்வி ஊக்கத்தொகையை மாணவியர்கள் பெறும் பொருட்டு அதற்கான படிவத்தில் பள்ளி தலைமையாசிரியர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் ஆகியோரிடம் கையொப்பம் பெற்று கல்வித்துறையிடம் மனு அளிக்க வேண்டும். அதனை தொடர்ந்து மாணவியர்கள் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வங்கி கணக்கு துவக்கி அதன் வழியாக கல்வித்துறையின் மின்னனு பண பரிவர்த்தனை மூலம் மாணவியரின் வங்கி கணக்கிற்கு கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படுகிறது.
தற்போது இந்த உதவித் தொகையை கூட மாணவியர்கள் பெற முடியாத வகையில் வங்கி நிர்வாகங்கள் கணக்கு பராமரிப்பு மற்றும் சேவை கட்டணம் என்ற பெயரில் சுரண்டிவிடுவதாக குற்றம்சாட்டுகின்றனர் ஆதிதிராவிட பழங்குடியின மாணவியர்கள். குறிப்பாக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்காகவே வங்கி கணக்கு துவக்கும் நிலையில் உள்ள மாணவியர்களால் தங்களது பள்ளி பருவத்தில் வேறு எந்தவிதமான பணபரிவர்த்தனையும் செய்ய இயலாது.
இதைகூட உணராமல் வங்கி நிர்வாகங்கள் வியாபார நோக்கத்துடன் தனது வாடிக்கைகயாளர்கள் அனைவரையும் ஒருமுகமாகவே கருதி சுரண்டலை மேற்கொண்டு வருகிறதெனவும். அரசு வழங்குவதோ ஆண்டுக்கு ரூபாய் 500. அந்த பணத்தையும் வங்கிகள் சுரண்டு நிலை தொடர்வது வேதனைக்குரியது என ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர். இத்தகைய சுரண்டல் போக்கை கைவிட்டு மாணவியர்கள் வங்கி கணக்கை தனியாக பிரித்து அதில் எந்தவொரு சேவை மற்றும் பராமரிப்பு பரிவர்த்தனை கட்டணமும் வங்கி நிர்வாகங்கள் வசூலிக்க கூடாது என்பதை வேண்டுகோளாக முன்வைக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.