Skip to main content

"சவக்களை" படிந்து விட்டது..! -முடங்கும் அபாயத்தில் ஜவுளி..!

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

 

மத்தியில் பாஜக மோடி அரசு மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு தொழில்துறை மிகவும் இறங்குமுகமாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக ஜவுளி தொழில் தனது இறுதி மூச்சை விடும் நிலைக்கு சென்று விட்டதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் மனம் குமுறி கூறுகிறார்கள்.

 

 industry -



தென் மாநிலத்தில் ஜவுளித் தொழிலுக்கு தமிழகமே பிரதானமாக உள்ளது. அதில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மண்டலம் மிக முக்கியமானதாகும். இங்கு ஆயத்த ஆடைகள் உட்பட வேட்டி சேலை என அனைத்து வகையான ஜவுளிகள் உற்பத்தி செய்யப்பட்டு அவை விற்பனையும் இங்குதான் நடக்கிறது. 
 

குறிப்பாக ஈரோடு ஜவுளி சந்தை மிகவும் பிரபலமானது. திங்கள் மற்றும் செவ்வாய் இரண்டு நாட்களும் ஈரோடு ஜவுளி சந்தையில் பல ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வரத்து இருக்கும். வடமாநிலங்கள் தொடங்கி பல்வேறு பகுதிகளிலிருந்து ஜவுளி வியாபாரிகள் ஈரோட்டுக்கு வந்து அவர்களுக்கு தேவையான ஜவுளி ரகங்களை மொத்தமாக வாங்கிச் செல்வது வழக்கம். அப்படி திங்கள் மற்றும் செவ்வாய் இரு நாட்களும் இங்கு நடக்கும் ஜவுளி வியாபாரம் சுமார் இருநூறு கோடியை தாண்டும். அந்த அளவுக்கு விற்பனையின் கேந்திரமாக ஈரோடு இருந்தது.
 

ஆனால் சமீபகாலமாக ஜவுளி விற்பனை என்பது மெல்ல மெல்ல குறைந்து நூறு கோடி ரூபாய் அளவுக்கு வந்து நின்றது. அதிலும் குறிப்பாக சென்ற வாரம் மற்றும் இந்த வாரம் வெளிமாநில வியாபாரிகள் 90 சதவீதம் சந்தைக்கு வரவே இல்லை. இதனால் வியாபாரம் முழுமையாக படுத்துவிட்டது. ஜவுளி விற்பனை செய்யும் கடைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.


 

இதுபற்றி ஜவுளி வியாபார தொழிலில்  ஈடுபடுவோர் கூறுகையில், ''கடந்த ஓரிரு வருடங்களாகவே ஜவுளித் தொழில் நசிந்து வருகிறது. இதற்கு காரணம் மத்திய அரசு ஜவுளித் தொழில் மீது போடப்பட்ட பல்வேறு விதமான வரிகளோடு ஜிஎஸ்டி வரியும் மிகப் பெரிய சுமையாக இருக்கிறது. இதை மத்திய அரசின் கவனத்திற்கு பலமுறை எடுத்துச் சென்றோம். ஏன்? அமித்ஷா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு ஈரோடு வந்த போது வெளிப்படையாக நாங்கள் அவரிடம் எல்லாவற்றையும் கூறினோம்.


அடுத்த முறை ஆட்சிக்கு வந்தவுடன் எங்களது முதல் வேலை ஜவுளித் தொழிலை காப்பாற்றுவதுதான், அதற்கு ஜிஎஸ்டி பிரச்சனையாக இருந்தால் அதை களைவோம் என்று கூறிவிட்டுப் போனார். போனவர் போனவர்தான் அமைச்சராகி அரியணையில் அமர்ந்து விட்டார். ஆனால் இப்போது பாருங்கள் ஜவுளித்தொழில் தனது இறுதி கட்டத்தை எட்டும் அளவுக்கு போய்விட்டது. இந்த தொழிலில் ஈடுபடும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இப்பொழுது வருமானத்திற்கான வழி இல்லாமல் அவதிப்படுகின்றனர்" என்றனர்.  
 

ஜவுளி சந்தை களை இழந்து விட்டது மட்டுமல்ல சவக்களை படிந்த பரிதாபமாக காணப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்