மத்திய பா.ஜ.க. அரசு கொள்கைகளை கண்டித்து, இந்திய அளவில் காங்கிரஸ் உட்பட பிரதான எதிர்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நவம்பர் 26ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தம் போராட்டம் நடத்துகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்ததோடு போராட்டத்தில் கலந்து கொள்வோம் என அறிவித்துள்ளது.
இடதுசாரிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்கள், விவசாய, விவசாய தொழிலாளர் சங்கங்கள் இணைந்து இப்போராட்டத்தை முன்னின்று நடத்துகிறது. இந்த பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான அனைத்திந்திய இளைஞர் பெருமன்றமும் (ஏ.ஐ.ஒய்.எப்.) கலந்து கொள்ளும் என அதன் தமிழ் மாநில செயலாளர் க.பாரதி கூறியுள்ளார். இது சம்பந்தமாக மேலும் அவர் கூறும்போது, "மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு மிக மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் தொழிலாளர் விரோத, விவசாய விரோத சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இது இந்திய நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கிவிட்டது.
அரசு வங்கிகள், இன்சூரன்ஸ், இரயில்வே, பாதுகாப்புதுறை தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளை கார்ப்ரேட் நிறுவனங்களின் கரங்களில் ஒப்படைத்து வருவதை எதிர்த்தும் கரோனா கால நிவாரணம் என ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தான் நவம்பர் 26 அன்று அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயசங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தமிழ்நாடு மாநிலக்குழு தனது முழு ஆதரவையும் தெரிவித்துக்கொள்வதோடு தமிழகத்தில் A I T U C, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழக விவசாய தொழிலாளர் சங்களின் சார்பில் நடைபெறும் மறியல் போராட்டத்திலும் இளைஞர் பெருமன்ற தோழர்கள் மிகவும் திரளாக எங்களின் கொடிகளுடன் கலந்து கொள்வோம் மேலும் இப்போராட்டத்தில் இளைஞர்களும், மாணவர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேராதரவு தரவேண்டுமெனவும் இளைஞர் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது” என்றார்.
இதை போலவே மாணவர்கள் அமைப்பான ஏ.ஐ.எஸ்.எப்,, சி.பி.எம்.மின் எஸ்.எப்.ஐ., DYFI ஆகிய அமைப்புகளும் நவம்பர் 26 ந் தேதி பொது வேலை நிறுத்தம் மறியல் போராட்டங்களில் கலந்து கொள்ளும் என அறிவித்துள்ளது.