ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடை ஏற்பட்டு பிறகு அந்தத் தடை மாணவர்கள் இளைஞர்கள் படையால் உடைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழகம் முழுக்க ஏகோபித்த ஆதரவை கொடுத்தது கடந்த இரு வருடங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடைபெறத் தொடங்கியது.
அப்படித்தான் மேற்கு மண்டலமான ஈரோட்டில் சென்ற ஆண்டு முதன்முதலாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டு இன்று காலை பெருந்துறை சாலையில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளி மைதானத்தில் தொடங்கியது. மாலை வரை தொடர்ந்து நடைபெற்று சுமார் 300 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் இதில் பங்கு பெற்றனர்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் விழா தொடங்கியது. மாவட்ட அமைச்சர்களான கே.ஏ செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். காளைகளின் வீரவிளையாட்டு தொடங்கியதும் வாடிவாசல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு காளைகளும் சீறிப்பாய்ந்து திமிறிக்கொண்டு ஆவேசத்துடன் அந்த காளைகளின் ஆட்டம் வெகு கோலாகலமாக இருந்தது.
சுமார் 14 காளைகளை அடக்கி மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் முதல் பரிசைப் பெற்றார். இரண்டாவது பரிசை 11 காளைகளை அடக்கி நத்தத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பெற்றார். இதில் சிலருக்கு லேசான காயமும், ஓரிருவருக்கு கூடுதலான காயம் ஏற்பட அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதைக்காண ஈரோடு பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் ராஜசேகர் உட்பட பலரும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் மிகச்சிறப்பாக இரண்டாவது ஆண்டாக இந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடைபெற்று முடிந்துள்ளது.