தெலுங்கில் புகழ்பெற்றக் கவிதை வடிவமான ‘நானிலு’ தமிழில் ‘தன்முனைக்’ கவிதை என்ற பெயரில் மலர்ந்திருக்கிறது. இந்தத் தன்முனை வடிவத்தில் 31 கவிஞர்கள் எழுதிய ‘ நான் நீ இந்த உலகம்’ என்ற கவிதைத் தொகுப்பினை கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் தொகுக்க, அதை ஓவியா பதிப்பகம் சார்பில் வதிலை பிரபா பதிப்பித்திருக்கிறார். இவ்வகையில் தன்முனைக் கவிதைகளின் முதல் தொகுப்பு நூலான ‘நான் நீ இந்த உலகம்’ நூல் வெளியீட்டு விழா 1-ந் தேதி மாலை சென்னை எழும்பூரில் உள்ள இக்சா அரங்கில் சிறப்புற அரங்கேறியது. வதிலை பிரபா வரவேற்புரை நிகழ்த்த, கவிஞர் பாரதி பத்மா நிகழ்ச்சிகளைக் கவித்துவமாகத் தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவிற்குத் தலைமை ஏற்று நூலை வெளியிட்டுப் பேசிய, நக்கீரன் தலைமைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் ‘இன்று இலக்கிய உலகம், குறிப்பாக கவிதை உலகம், குப்பை கூளம் நிறைந்ததாக மாசடைந்து ஆரோக்கியக் குறைவோடு இருக்கிறது. அழுக்குச் சிந்தனைகள், ஆபாசக் சொற்குப்பைகள், பிற்போக்குக் குரல்கள், அதி நவீனம் என்ற பெயரில் தெளிவுக்கு மாறான குழப்ப கூச்சல்கள் என்று, இன்று பெரும்பாலான கவிதைகள் மூச்சுத் திணறுகின்றன. காரணம் நவீன கவிஞர்கள் என்கிற பெயரில் இருக்கும் சிலர் தமிழ்க் கவிதைகளை காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு அவற்றின் கழுத்தை நெறித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து முதலில் நாம் தமிழ்க் கவிதைகளைக் காப்பாற்றவேண்டும். கவிதைகள் மனிதத்துக்கு அரண் செய்வதாகவும், மானுட ஈரத்தைக் காப்பதாகவும் இருக்க வேண்டும். அடுத்தவருக்கு ஒரு குவளை நீர் கொடுத்தால் கூட அதில் ஒரு சொட்டு மனிதம் இருக்கவேண்டும். நீங்கள் ஒருவருக்கு அறுசுவை விருந்து கொடுத்தால் கூட அதில் ஒரு பருக்கையாவது மனிதம் இருக்கவேண்டும். மனிதர்களிடையே, அன்பை வளர்த்து மனிதத்தைக் காப்பாற்றுவதற்காத்தான் இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன’ என்றார் அழுத்தமாய்.
பண்ணைத் தமிழ் சங்கத் தலைவர் கவிக்கோ துரை.வசந்தராசனோ ‘கொள்கையற்ற இலக்கியங்கள் காணாமல் போய்விடும். கொள்கையற்ற இலக்கியம், வெறும் வார்த்தைகளின் பிணமாகத்தான் இருக்கும்’ என்றார் உணர்ச்சிமயமாக.
கவிஞர் வெற்றிப்பேரொளியோ, தமிழில் இதுபோன்ற புதிய வரவுகள் வரவேண்டும். தமிழில் 96 சிற்றிலயங்கள் இருக்கும் நிலையில் நீடாமங்கலத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் மறையரசன்தான், ‘பிள்ளைத்தமிழ்’ போல் ‘முதுமைத்தமிழ்’ என்ற சிற்றிலக்கிய நூலைத் தமிழில் முதன்முதலில் படைத்தார். அதுபோல் இது தமிழுக்குப் புதுநூல் என்றார்.
முன்னாள் துணை ஆட்சியர் முருகன், குமரன் அம்பிகா, மயிலாடுதுறை இளையபாரதி, உதயக்கண்ணன், தினமணி திருமலை, வசீகரன், வட சென்னை தமிழ்ச் சங்க இளங்கோவன், கவிஞர் ஜலாலுதீன், கவிஞர் வீரசோழன் கா.சோ.திருமாவளவன் போன்றோர் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர். தொகுப்பாசிரியர் கவிஞர் க.ந.கல்யாணசுந்தரம் நன்றி கூறினார். தமிழின் முதல் தம்முனைக் கவிதைத் தொகுப்பு நூலின் வெளியீட்டு விழா என்பதால், இது இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்திருக்கிறது.
-சூர்யா