வடலூரில் சர்வதேச வள்ளலார் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் பல்வேறு வழக்குகள் சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
இன்று இது தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்பொழுது வள்ளலார் தெய்வ நிலையத்திற்கு சொந்தமான 34 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ள உரிமை கோரும் 269 பேரின் விவரங்கள் அரசு சார்பில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் 269 பேரின் விவரங்கள் இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 269 பேரையும் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் அக்டோபர் மூன்றாம் தேதிக்குள் அவர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும், அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்து அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசினுடைய அனுமதி இல்லாமல் வள்ளலார் தெய்வ நிலையத்திற்கு சொந்தமான இடங்களை தனிநபர்களுக்கு விற்பனை செய்த கோவில் அறங்காவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர். வள்ளலார் பெருவழி அமைந்துள்ள இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் 10.44 ஏக்கரில் முதியோர் இல்லம், சித்த மருத்துவமனை, விடுதிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவின் காரணமாக அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்த இடத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை. கட்டுமான பணிகளைத் தொடங்கி அதில் ஏதும் எதிர்ப்பு எழுந்தால் அக்டோபர் மூன்றாம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டதோடு, அந்த இடத்தில் கட்டுமான பணிகளை இரண்டு வாரத்திற்கு பிறகு தொடங்கலாம் என தெரிவித்து இந்து அறநிலையத்துறைக்கு அனுமதி அளித்த நீதிமன்றம், வழக்கை அக்டோபர் மூன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்தது.