தமிழகத்தில் வீட்டு இணைப்பிற்கு எக்காரணத்தைக் கொண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வீட்டு இணைப்பிற்கான மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், எக்காரணத்தைக் கொண்டும் வீட்டு இணைப்புக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், “வீட்டு இணைப்பிற்கு எக்காரணத்தைக் கொண்டும் மின் கட்டணத்தை உயர்த்தமாட்டோம். திட்டமிட்டு தவறான தகவல் பரப்பப்படுகிறது. அனைத்து மின்சார சலுகைகளும் தொடரும். வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். கைத்தறி, நெசவு தறி விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரமும் தொடரும். மத்திய அரசின் புதிய சட்டப்படி 4.7 சதவீதம் மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். ஆனால் அதனை 2.18 சதவீதமாகக் குறைத்து அந்த தொகையையும் மானியமாகத் தமிழக அரசே ஏற்றுக்கொண்டு மின் வாரியத்திற்குத் தருவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகவே வீட்டு இணைப்பைப் பொறுத்தவரைக்கும் எந்த வித கட்டண உயர்வும் இருக்காது. வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் கட்டண உயர்வு இருக்கும். அதுவும் 13 பைசாவிலிருந்து 23 பைசா வரைதான் உயர்வு இருக்கும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. கடந்த ஆட்சியில் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. உதய் திட்டத்தில் அதிமுக ஆட்சி கையெழுத்திட்டது. அதனால்தான் இவ்வளவு பிரச்சனையும் நடந்துகொண்டிருக்கிறது” என்றார்.