Skip to main content

மின்சார வாரியத்தின் அலட்சியம்; பலியான வாலிபர்

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

electricity  board wire connection issue in perumbakkam 

 

சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது 42), பெரும்பாக்கத்தில் சிற்றுண்டி உணவக கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன், இவர் நேற்று காலை 10 மணியளவில் தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பள்ளியில் விட்டு விட்டு நேதாஜி மெயின் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது மின் கம்பி அறுந்து அவர் மீது விழுந்துள்ளது.  இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து. உயிரிழந்தார்.

 

இதனை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு அருகில் உடலை சாலையிலேயே வைத்துக் கொண்டு பெரும்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைக்க மறுத்து அதிகாரிகள் இங்கு வர வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் இருந்ததால் தான் விபத்து நேரிட்டதாகவும், பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளை கைது செய்யவும் வலியுறுத்தினர். போராட்டம் நடத்தியவர்களிடம் பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

 

போலீசாரின் பேச்சுவார்த்தையில் மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், மின்வாரியம் சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும், அரசு வீடு, மற்றும் நிவாரணம் வழங்கவும், குழந்தைகளின் எதிர்கால கல்வியை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். போராட்டக்காரர்களிடம் தாம்பரம் தாசில்தார் கவிதா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் 4 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்து உடலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பிற்காக போடப்பட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்