இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளதாக தொழில்துறையினர் நேரடியாகவே அரசாங்கத்தை குற்றம்சாட்டி வருகின்றனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5% சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக வரலாறு காணாத அளவில் வாகன விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள பிரபல நிறுவனங்கள் பெரும்பாலும் தங்களது தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்தும், தொழிற்சாலைகளில் அவ்வப்போது உற்பத்தியை நிறுத்தியும் வருகின்றன. மேலும் மாதத்தில் பாதி நாட்கள் தொழிற்சாலைகளில் எந்தவித பணிகளும் நடைபெறாமல் மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையில்லாமல் தடுமாறி வருகின்றனர்.
வாகனங்கள் மற்றும் பிற பொருட்களை வாங்கும் சக்தி மக்களிடம் குறைந்து விட்டது. 5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் கூட வாங்க தயங்குகின்றனர். இதனால் எங்களது விற்பனை சரிந்துவிட்டது என கூறிய பார்லேஜி நிறுவனம் தனது நிறுவனத்தின் ஒரு பகுதியை மூடியுள்ளது. இதேபோல் உலகத்தின் மிக முக்கியமான இந்தியாவின் பெரிய கட்டுமான, தொழில்துறை நிறுவனமாக எல் அன்ட் டி நிறுவனமும் தொழில் முடக்கம், பொருளாதார வளர்ச்சி இல்லாதது குறித்து கவலையடைந்து தங்களது நிறுவனத்தையும் அது பாதித்துள்ளதாக கூறியுள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் பகுதியில் செயல்பட்டுவரும் கார்டியன் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் என்கிற கார் மற்றும் லாரிகளுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் 74 ஒப்பந்த தொழிலாளர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி செப்டம்பர் 6ந்தேதி பணியிடைநீக்கம் செய்துள்ளது அந்நிர்வாகம்.
இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேலையில்லையென நிறுவனத்தின் முகப்பு வாயிலில் தொழிலாளர்களிடம் கூறி, நிறுவனத்தின் அதிகாரிகள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் அதிர்ச்சியான தொழிலாளர்கள், நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் நிறுவன வளாகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.