
தமிழகத்தில் சமீபமாக, தினசரி புதியதாக 1800 பேருக்கு கரோனா நோய் பாதிப்பு ஏற்படுகிறது. அதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் தினசரி 1400 நபர்களுக்கு வருகிறது. இதனால் சென்னை மாவட்டமே அதிர்ந்துப்போயுள்ளது. சென்னையில் இருந்து யாராவது வெளியூர் சென்றால் மக்கள் பயத்துடனே அவர்களை பார்க்கிறார்கள்.
தமிழகத்தின் பிறமாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தொழில், பணி மற்றும் வேலை நிமித்தமாக சென்னையில் வசிக்கிறார்கள்.
கரோனா பரவலை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு கடந்த மார்ச் 24ந்தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் அதனை கடைப்பிடித்து கரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருந்தன. சென்னை மாவட்டத்துக்குள் வரும் கோயம்பேடு காய்கறி சந்தையை மட்டும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் மூடவில்லை.
கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிய சிலருக்கு கரோனா என உறுதியான பின்பே மார்க்கெட் மூடப்பட்டது. மார்க்கெட் மூடப்பட்டதும் அங்கு வேலை செய்தவர்கள் பல வழிகளில் தங்களது பூர்வீக மாவட்டத்தை நோக்கி செல்லத்துவங்கினர். அப்படி சென்றவர்களை பரிசோதனை செய்தபோது, பலருக்கும் கரோனா பாசிட்டிவ் என வந்தது. இதனால் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
கோயம்பேடு சந்தையில் வேலை செய்தவர்கள், அங்கு கடை வைத்திருந்தவர்கள், அங்கு சென்று வந்தவர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட பலருக்கும் கரோனா வந்துயிருப்பது தெரிந்து அந்த மாவட்டங்களில் பரிசோதனை அதிகப்படுத்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கின. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.
பொது போக்குவரத்துக்காக மண்டலங்கள் பிரிக்கப்பட்டபோது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. இ-பாஸ் வாங்கிக்கொண்டு ஒரு மண்டலத்தில் இருந்து பிற மண்டலங்களுக்கு செல்ல வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பெரியதாக ஆர்வம் காட்டவில்லை மாவட்ட நிர்வாகங்கள். இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் 70 சதவிதம் தந்தது ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும். சென்னை என்றால் மட்டும் 40 சதவிதம் அளவுக்கு அனுமதித்தது.

தற்போது நாளுக்கு நாள் சென்னையில் கரோனா பரவல் அதிகமாகி பயமுறுத்துகிறது. இதனால் தமிழகத்தின் பிறமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து பணியாற்றுபவர்கள், வேலை செய்பவர்கள் தங்களது குடும்பத்தோடு, அவரவர் மாவட்டம் நோக்கி பயணிக்கின்றனர். அனுமதி பெற்று வருபவர்கள், அனுமதி பெறாமல் வந்து, கிராம அளவில் உள்ள கரோனா பாதுகாப்பு கமிட்டி மூலம் காவல்துறைக்கு தகவல் சென்று பரிசோதனைக்கு செல்பவர்களில், 20 சதவிதம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அதனால் சென்னையில் இருந்து யாரும் வெளியேறாதபடி கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து யாராவது தமிழகத்தின் பிறமாவட்டங்களுக்கு செல்கிறேன் என இ-பாஸ்க்கு விண்ணப்பித்தால் அடுத்த 5 நிமிடத்தில் ரிஜக்ட் செய்யப்படுகிறது. அதேபோல் பிறமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருகிறேன் என இ-பாஸ் கேட்டாலும் சென்னை மாவட்ட நிர்வாகம் வழங்குவதில்லை. அதுவும் சில நிமிடங்களிலேயே ரிஜக்ட் செய்யப்படுகிறது. இதனால் சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் நொந்துபோயுள்ளனர்.
இ-பாஸ் இல்லாமல் இருசக்கர வாகனங்களில் சென்றுவிடலாம் என வருபவர்களை தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட மற்றும் கிராமப்புற சாலைகள் வரை பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் அவர்களது உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.