Skip to main content

“சுற்றுச்சூழல் அமைச்சர் தொகுதியிலேயே ஆற்றில் சாயக் கழிவு கலக்கிறது..”  - கொ.ம.தே.க.ஈஸ்வரன் கண்டனம்

Published on 28/12/2020 | Edited on 28/12/2020

 

"Dye waste is mixing in the river in the constituency of the Minister of Environment."


ஈரோடு மாவட்டம், அந்தியூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் முன்பு 28ஆம் தேதி திங்கள்கிழமை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் "நீர்வள ஆதாரங்களை நிறைவேற்றக் கோரி" தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

 


இந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாநில பொறுப்பாளர் துரைராஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்துகொண்ட கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து பேசுகையில், "தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று தெரிவிக்க முடியாத சூழ்நிலையில் இப்போது  உள்ளது. 

 

அந்தக் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் இதுபோன்று குழப்பம் நிலவியதாலும், அந்தக் கட்சியின்  உறுப்பினர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமலும் அ.தி.மு.க. அரசு பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட அவர்கள் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

 

இது, மக்களுக்கான அரசே இல்லை. மாறாக மக்கள் விரோத அரசாக இருக்கிறது. மிக கொடுமையான விஷயம் என்னவென்றால், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணனின் சொந்த மாவட்டத்திலேயே விஷக் கழிவு, சாயக் கழிவு ஆகியவை பவானி ஆற்றில் கலக்கிறது. மேலும் பூனாட்சி பகுதியில் செயல்பட்டுவரும் குச்சி கிழங்கு மில்லில் இருந்து ஏராளமான கழிவுகள் அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் கலக்கிறது. 

 

இதனால் அப்பகுதியில் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து, மக்கள் குடி நீருக்கே அன்றாடம் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கண்டுகொள்வதே இல்லை. அவரது துறை முழுமையாக  ஊழல் துறையாக மாறிவிட்டது" என்றார். 

 

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வரும் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தி.மு.க.வுடன்தான் கூட்டணியில் இருக்கும். மேலும் தமிழக அரசு மேட்டூர் வலது கரை வாய்க்கால் திட்டம், மணியாச்சி திட்டம், வழுக்கு பாறை திட்டம், வேத பாறை திட்டம் ஆகிய திட்டங்களை உடனடியாக நிறைவேற்றி இப்பகுதியிலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்க வேண்டும். நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது என்பது, அது அவர்களது விருப்பம். தேர்தல் வரும் பொழுது மக்கள் தான் அதை முடிவு செய்வார்கள்” என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்