தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளைத் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் 10ஆம் தேதி (10.09.2024) சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். அதன்படி மாவட்ட, மண்டல அளவில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என மொத்தம் 11 லட்சத்து 56 ஆயிரத்து 566 நபர்கள் 36 வகையான விளையாட்டுப் போட்டிகளில், 168 பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய நகரங்களில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, மாவட்ட மண்டல அளவில் வெற்றி பெற்ற 33 ஆயிரம் நபர்கள் பங்கு பெறும், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளைத் துணை முதலமைச்சர் கடந்த 4ஆம் தேதி (04.10.2024) தொடங்கி வைக்கப்பட்டு இன்று (24.10.2024) வரை சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற்றது.
இதில் 105 தங்கம், 80 வெள்ளி, 69 வெண்கலப் பதக்கங்கள் வென்று சென்னை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்ததாக 31 தங்கத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் 2ஆம் இடமும், 23 தங்கத்துடன் கோவை மாவட்டம் 3ஆம் இடமும், 21 தங்கத்துடன் சேலம் மாவட்டம் 4வது இடமும் பிடித்துள்ளன. இந்நிலையில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “‘தமிழ்நாட்டின் ஒலிம்பிக்’ எனச் சொல்லும் அளவிற்கு ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டிகளைப் பிரமாண்டமாக நடத்தியுள்ளோம்.
இந்தியாவில் விளையாட்டு தலைநகரம் தமிழ்நாடு என்று சொல்லும் அளவிற்கு இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி உதாரணமாகத் திகழ்கிறது. இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராகத் தமிழ்நாடு உருவாகி வருகிறது. விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு ரூ. 83 கோடி நிதியை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒதுக்கினார். அதில் ரூ. 37 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே ஒரு மாநில அரசால் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியில் அதிக வீரர்கள் கலந்துகொள்வதிலும், அதிக பரிசுத் தொகை வழங்கப்படுவதிலும் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு ஆகும்” எனத் தெரிவித்தார்.