அ.தி.மு.க. முன்னணி நிர்வாகியான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மதுரையில் நேற்று திடீரென அளித்த பேட்டியில், அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவை போன்று அதிகாரம் மிகுந்த ஒரே தலைமை உருவாக வேண்டும். இரட்டை தலைமையால் யார் முடிவெடுப்பது? என்கிற குழப்பம் கட்சியில் இருப்பதாக கூறிய அவர், பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமை பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேசினார். இதனால் அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு மேலும் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன், உடல்நல குறைவு காரணமாக கேரளாவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தனது கருத்தை வீடியோவில் பதிவு செய்து ‘வாட்ஸ்அப்’பில் வெளியிட்டுள்ளார். அதில், அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று மதுரை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா கூறியுள்ள கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. அவர் சொல்வது போல் ஒற்றை தலைமையும் வலிமையான தலைமையாக சுயநலமற்ற தலைமையாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தங்களது குடும்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு கழகமே தனது குடும்பம் என உருவாக்கி காத்திட்ட அ.தி.மு.க.வை யார் தனது குடும்பத்திற்காக மிரட்டினாலும் சரி, பிளவுப்படுத்த எண்ணினாலும் சரி, அ.தி.மு.க.வில் மீண்டும் ஒரு சசிகலாவாகத்தான் தொண்டர்கள் நினைப்பார்கள்.
இதனை தலைவர்கள் புரிந்து கொண்டு கழகத்திற்காக தங்களை அர்ப்பணித்து வாழ வேண்டும். அதனை விட்டு விட்டு தங்களது குடும்பத்திற்காக கட்சியை வளைக்க நினைப்பது என்னை போன்ற நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வேதனை அளிக்கிறது’’என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. அளித்த பேட்டியில், அ.தி.மு.க.வில் குழப்பத்தையோ, உள்கட்சி பூசலையோ ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நான் கருத்து தெரிவிக்கவில்லை. கட்சியின் நலன் கருதியே எனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன். அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்கு மத்திய மந்திரி பதவி கேட்டதாக வெளியான செய்திகள் வருத்தத்தை ஏற்படுத்தியது. தி.மு.க- காங்கிரஸ் செய்த தவறுகளை அ.தி.மு.க. மக்களிடம் எடுத்துச் செல்ல தவறிவிட்டது என்று கூறியுள்ளார்.
ராஜன்செல்லப்பாவை அடுத்து ராமச்சந்திரனும், இரட்டை தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருப்பது அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.