Skip to main content

"அப்பா... நீ குடிக்கிற... எனக்கு கொள்ளி வைக்காதே..." டாஸ்மாக்கை மூட உயிரை கொடுத்த மாணவன்!

Published on 02/05/2018 | Edited on 02/05/2018
dinesh kumar

நெல்லை மாவட்டத்தின் குருக்கள்பட்டி அருகே உள்ள கே.ரெட்டிபட்டி கிராமத்தின் விவசாய கூலியான மாடசாமி, இசக்கியம்மாள் தம்பதிக்கு தினேஷ்குமார் பாலசந்திரன் என இரண்டு மகன்கள். வேலை வெட்டிக்கு போகும் தந்தை மாடசாமியோ குடிப்பழகத்திற்கு அடிமையானதால் கிடைக்கும் கூலியை குடியிலேயே காலி பண்ணிவிடுவார். இதனால் தன் கணவனை கண்டித்தே ஒய்ந்துபோன தாய் இசக்கியம்மாள் தன் வருமானத்திலேயே தன் பிள்ளைகளை வளர்த்திருக்கிறார்.
 

கடந்த 2008ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக தாய் இசக்கியம்மாள் மரணமடைய, தந்தை மாடசாமியோ குடியால் பிள்ளைகளைக் கவனிக்காமலேயே இருந்துள்ளார். தினேஷ்குமாரும் தம்பியும் நிற்கதியானார். இதனிடையே மாடசாமி 2வது திருமணம் செய்துக் கொண்டார். அதன் மூலம் முத்துச்செல்வி என்ற மகளும் உண்டு.

தினேஷ்குமாரும் அவனது தம்பியும் அனாதையான நிலையில், படிப்பதற்குரிய சூழல் இல்லாததை கண்டு, மதுரையில் ஆசிரியர் பணியிலிருக்கும் அவனது சித்தப்பா சங்கரகுற்றலாம் தன் பராமரிப்பிற்கு அவர்களை கொண்டு வந்ததோடு, தினேஷை நாமக்கல் மாவட்டம் ஆண்டலூரிள்ள விகாஷ் மெட்ரிக் பள்ளியிலும், தம்பியை மதுரையிலுள்ள பள்ளியிலும் படிக்க வைத்திருக்கிறார்.
 

தந்தை மறுமணம் செய்ததால், சித்தியோ சரியாக கவனிக்காததோடு, அவர்களுக்கு சாப்பாடு கூட முறையாக தருவது இல்லையாம். இதன் காரணமாக தினேஷ் கிராமத்திற்கு விடுமுறையில் எப்போதாவது வந்து போவான். அப்போது கூட அவன் குடிக்க வேண்டாமென்று தன் தந்தையை கண்டித்ததோடு அவரோடு வாக்குவாதம் பண்ணியிருக்கிறார்.

 

dinesh kumar


 

இதனிடையே +2 பரீட்சையை நெல்லை சென்டரில் எழுதி தினேஷ் மதுரையிலுள்ள தன் சித்தப்பா வீட்டிற்கு போனவன், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டிபட்டிக்கு வந்திருக்கிறான். அது சமயம் குடிப்பதற்கு பணமில்லாமல் தவித்த தந்தை மாடசாமி, அவனது சட்டைபையில் இருந்த 1500 ரூபாய் பணத்தை எடுத்திருக்கிறார். அதைக் கண்ட தினேஷ் அவரிடமிருந்த பணத்தை பிடுங்கியதோடு, பணம் தரமாட்டேன் சித்தப்பா என் செலவுக்காக கொடுத்த பணத்தை சேமித்து செல் வாங்க வைத்திருக்கிறேன் என்று கூறிவிட்டு தினேஷ் பணத்தோடு வெளியேறியுள்ளார். மேலும் திருந்தாத தன் தந்தையின் நிலை அவனை மன உளைச்சலில் தள்ளியிருக்கிறது. அதே கவலையில் சென்னை சென்று தன் உறவினர்களை பார்த்து விட்டு மனம் ஒடித்த நிலையில் நெல்லைக்கு வந்தவன் பாளை தெற்கு புறவழிச் சாலையிலுள்ள மேம்பாலத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறான்.

அவனுடைய உயிர் போனதுமில்லாமல் அவன் எழுதிய உருக்கமான கடிதம்தான் பாறை மனதையும் நொறுக்குவதாக இருந்தது.

 

dinesh kumar


 

''அப்பா நீ திருத்தமாட்ட, எனக்கு கொள்ளி வைக்காதே. நீ கொள்ளி வைச்சா என் மனசு ஆறாது. சித்தப்பா மணிதான் எனக்கு கொள்ளி போடனும். இனி எந்த ஒரு தந்தையும் குடிக்கக் கூடாது. பாரத பிரதமரே, சாரய கடையை அழியுங்கள். மூட முடியலையா, நான் ஆவியா வந்து குடிப்பவங்களை பயமுறுத்துவேன். மதுக்கடைகளை அடைப்பேன். இது சத்தியம்'' என்று மரண சாசனம் எழுதியிருக்கிறார்.

தினேஷின் மாமா சங்கரலிங்கம், ''அவன் ஊருக்கு வந்தா எங்க வீட்டுல இருப்பான். இங்கதான் அவனுக்கு சாப்பாடு. அவன் அப்பனை கண்டிச்சும் அவன் குடியை நிறுத்தல. நல்லா படிக்கிற பையன். ஒழுக்கமான பையன் படிப்பில் முதல் ரேங்க்ல வரவேண்டிய பையன். இந்த முடிவுக்கு போயிட்டானே என கண் கலங்கினார்.
 

இனி மேலாவது அரசுக்கு உரைக்குமா...


 


 


 

சார்ந்த செய்திகள்