இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த 5 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டது. இதனால் பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி என்று டெல்லி தேர்தல் களம் மும்முனை போட்டியாக மாறியது. மூன்று கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்தது.
இந்நிலையில் டெல்லி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று(8.2.2025) காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பம் முதலே பாஜகவின் கை ஓங்கியிருந்த நிலையில் 3 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 23 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதேசமயம் காங்கிரஸ் கட்சியினர் ஒரு தொகுதிகளில் கூட முன்னிலை பெறாதது அக்கட்சியின் தேசியத் தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்டவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்திருப்பது குறித்து தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தான் பாஜகவை வீழ்த்தும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகத்திடம், டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு பதில்ளித்த அவர், 'எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையே பாஜகவை வீழ்த்த கூடிய ஒரு ஆயுதமாக இருக்கிறது. டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் இந்தியா கூட்டணி இருக்குமா அல்லது இருக்காதா என்று ஐயம் எழுகிறது. இந்தியா கூட்டணியை வலுப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முயற்சி மேற்கொள்ளும்''என்றார்.