![](http://image.nakkheeran.in/cdn/farfuture/JpdH5XKOD48Icb1kTDT3AsSCewnVDEKOMLAKpFWuSh8/1599420466/sites/default/files/styles/370x370/public/2018-07-02/anbumani%20ramadoss.jpg?itok=YH6TAV-J)
மத்திய அரசின் அழுத்தத்திற்கு தமிழக அரசு பணிந்து விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்வதோ, மின்கட்டணத்தை உயர்த்துவதோ கண்டிக்கத்தக்கது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் விவசாயம் உள்ளிட்ட தேவைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதும், வீடுகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுவதும் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்க காரணம் என்று மத்திய எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வேளாண் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் இலவச மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என்பதற்கான மறைமுக அறிவுரை தான் இதுவாகும்.
மாநில மின்சார வாரியங்களின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மத்திய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ‘பி’ தரம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழ்நாடு மின்வாரியம் இந்த தரத்தைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த அளவுக்கு பின்னடைவை சந்தித்து வருவதற்கு இலவச மற்றும் மானிய மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுவது, மின்துறை சீர்திருத்தங்கள் விரைவுபடுத்தப்படாதது ஆகியவை தான் காரணம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி, வணிக அடிப்படையிலான மின்சார இழப்பை கட்டுப்படுத்த வேண்டும், அனைத்து வகையான மின் இணைப்புகளுக்கும் மீட்டர் பொருத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மின்துறை சீர்திருத்தங்கள் என்று கூறினாலே, அது விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்வது தான். இப்போது மத்திய அரசு அளித்துள்ள பரிந்துரைகளின் நோக்கம் என்னவென்றால், விவசாயப் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்துவதன் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் எவ்வளவு மதிப்புள்ள மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது என்பதைக் கண்டறிவது, அதன்பின்னர் இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது, ஒரு கட்டத்திற்கு பிறகு இலவச மின்சாரத்தை ரத்து செய்வது தான்.
இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டதை விட இந்த முறை மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சி அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், இன்றைய பினாமி எடப்பாடி பழனிச்சாமி அரசு, மத்திய ஆட்சியாளர்கள் எதை சொன்னாலும் அதை செய்து முடிக்கும் தன்மை கொண்டது என்பதால் தான் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டு விடுமோ? என்ற அச்சம் எழுகிறது. இந்த அச்சம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்படுவதாக கூறுவதே அபத்தம் ஆகும். இலவச மின்சாரம் வழங்குதல், மானிய விலையில் மின்சாரம் வழங்குதல் ஆகியவற்றால் மின்சார வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட தமிழக அரசு மானியம் வழங்குகிறது. நடப்பாண்டில் மட்டும் இதற்கான மானியமாக ரூ.7540 கோடியை தமிழக அரசு வழங்குகிறது. இதற்குப் பிறகும் மின்சார வாரியம் இழப்பில் இயங்குவதற்கு காரணம் அதன் நிர்வாகத்தில் நிறைந்துள்ள ஊழலும், நிர்வாகச் சீர்கேடுகளும் தான். அதை சரி செய்தாலே தமிழ்நாடு மின்வாரியத்தை லாபத்தில் இயங்க வைக்கலாம். அதை விடுத்து இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயல்வது கண்டிக்கத்தக்கது.
அதுமட்டுமின்றி, பல்வேறு காரணங்களால் உழவர்கள் வறுமையிலும், கடன் சுமையிலும் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் விவசாயமே அழிந்து விடும்; உழவர்கள் தற்கொலை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இவை மோசமான தொடர்விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே, மத்திய அரசின் அழுத்தத்திற்கு தமிழக அரசு பணிந்து விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்வதோ, மின்கட்டணத்தை உயர்த்துவதோ கூடாது என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.