திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஜன. 21) நடைபெற்றது. இதையொட்டி கோட்டை கொத்தளம் போன்ற அலங்கார நுழைவு வாயில், பிரம்மாண்ட பந்தல் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திமுகவின் எழுச்சிப் படையாகக் கருதப்படும் இளைஞரணிக்கு 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் மாநாடு என்பதாலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் மாநாடு என்பதாலும், இந்த மாநாடு ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா, திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் மதிவதனி எனப் பலரும் உரையாற்றினர்.
இந்நிலையில் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம், உலகின் 'மிகப்பெரிய தற்காலிக மாநாட்டு அரங்கம்' என்று யுனிக் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் (Unique World Records) என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து இந்த மாநாட்டு அரங்கத்தை அமைத்த ‘பந்தல்’ சிவா தெரிவிக்கையில், 9.50 லட்சம் சதுர அடி பரப்பளவில், 45 நாட்களில் மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழனாகப் பெருமை கொள்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.