45- வது சென்னை புத்தக காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16/02/2022) மாலை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, புத்தக அரங்குகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர், உரைநடை - பத்திரிகையாளர் சமஸ், நாடகம் - பிரசன்னா ராமசாமி, கவிதை- கவிஞர் ஆசைத்தம்பி, புதினம்- எழுத்தாளர் வெண்ணிலா, பிறமொழி - பால் சக்காரியா, ஆங்கிலம் - மீனா கந்தசாமி உள்ளிட்டோர்களுக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது வழங்கினார். அதேபோல், மீனாட்சி சோமசுந்தரம், ரவி தமிழ்வாணன் ஆகியோருக்கு சிறந்த பதிப்பாளர் விருதும், பொன்னழகு - சிறந்த புத்தக விற்பனையாளர் விருதும், திருவை பாபு - சிறந்த குழந்தை எழுத்தாளர் விருதும் தேவிரா- சிறந்த தமிழறிஞர் விருதும், பாரதி பாஸ்கர் - சிறந்த பெண் எழுத்தாளருக்கான பதிப்பாளர் விருதும், கு.வை.பாலசுப்பிரமணியனுக்கு சிறுவர் அறிவியல் நூலுக்கான விருதும் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அறிவுக்கோயில்களைக் கட்ட ஆர்வமுள்ள அரசுதான் தி.மு.க. அரசு. பிற மாவட்டங்களிலும் பபாசியின் புத்தக காட்சி நடைபெற தமிழக அரசு உரிய உதவிகளை வழங்கும். நான் எழுதிய உங்களின் ஒருவன் என்ற சுயசரிதை நூலின் முதல் பாகம் இம்மாத இறுதியில் வெளியாகும். அந்த புத்தகம் புத்தக காட்சியில் இடம்பெறும். தற்போதைய தி.மு.க. ஆட்சியில் ஏழு தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.