பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இராமநாதபுரம் மாவட்டத்திற்குச் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று மண்டபத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பது குறித்தும், மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்தும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். “தமிழ்நாடு மீனவர்களை இலங்கை படை தொடர்ந்து தாக்குவதை மீனவர்கள் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. 2014ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அடக்குமுறை இன்னும் அதிகமாகியுள்ளது. பா.ஜ.க. ஆட்சியின் போது மீனவர்கள் மீது 48 முறை தாக்குதல் நடைபெற்றுள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சி பலவீனமாக இருப்பதால், மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதல் தொடர்கிறது.
மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணக் கச்சத்தீவை மீட்க வேண்டும். பிரதமர் சென்னைக்கு வரும்போதெல்லாம் இந்த பிரச்சனை குறித்து கோரிக்கை வைத்துள்ளோம். சமீபத்தில் இலங்கை அதிபர் இந்தியா வந்தபோதும் கச்சத்தீவை மீட்கக்கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். கச்சத்தீவை திமுக அரசு தாரை வார்த்து விட்டதாக வரலாறு தெரியாமல் உளறுகிறார்கள். கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்பதை உறுதிசெய்யும் அறிக்கையை 1972 ஆம் ஆண்டு கலைஞர் வெளியிட்டார். கலைஞரின் எதிர்ப்பை மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பிறகும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து மீட்கக் கலைஞர் வலியுறுத்தினார்” என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் மீனவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில்தான், அவர் கச்சத்தீவை மீட்போம் என்று கூறி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாகக் கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாஜகவின் நலன் மீனவர்களின் நலனைச் சார்ந்தது என்பது பிரதமருக்குத் தெரியும். அவர் நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரம் குறித்துப் பேசினார். ஆனால் இன்று அரசியல் நாடகத்திற்காக, இதெல்லாம் பேசி வருகிறார். மீனவர்கள் மத்தியில் முகத்தைக் காட்டமுடியாது என்பது அவருக்குத் தெரியும். ஏனென்றால் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மறுபடியும் தேர்தல் வரவுள்ளதால் மீண்டும் மீனவர்களை ஏமாற்றும் வகையில் பேசி வருகிறார். கச்சத்தீவைக் கொடுத்தது திமுக; அவர்களால் திரும்பி வாங்க முடியாது. கச்சத்தீவை எப்படிக் கொண்டு வரவேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்” என்றார்.