தனது உதவியாளரை அழைத்து காலணிகளை எடுக்கச் சொன்ன கள்ளக்குறிச்சி ஆட்சியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலக புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலின் சித்திரை திருவிழா வரும் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பற்றி ஆலோசிக்கவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் கோவிலுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வந்திருந்தார். கோவிலுக்கு உள்ளே செல்வதற்கு முன்பு தனது காலணிகளை கழட்டிவிட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அவரது உதவியாளரை அழைத்து காலணிகளை எடுத்துச் செல்ல உத்தரவிட்டார்.
உதவியாளரும் அவரது காலணிகளை கைகளால் எடுத்துச் சென்றார். இதனைக் கண்ட மற்ற அரசு அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சியும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் மாவட்ட ஆட்சியரின் இந்த செயலுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.