Skip to main content

தனி நபர்களை விமர்சித்தார்களா? அரசுப்பணியை விமர்சித்தார்களா?- அவதூறு வழக்குகளில் முடிவெடுப்பது குறித்து தமிழக அரசு!

Published on 10/12/2019 | Edited on 10/12/2019

அவதூறு வழக்குகளில் தனி நபர்களை விமர்சித்தார்களா, அவர்களின் அரசுப் பணியை விமர்சித்தார்களா என்பதை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்குப் பிறகே முடிவெடுக்க வேண்டுமென தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 
 

தமிழக அரசையும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை விமர்சித்ததாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

 Have you criticized individuals? Criticizing government work? chennai high court asked

எம்.பி.க்கள்  மற்றும் எம்.எல்.ஏ.கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி  மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
 

இந்த அனைத்து வழக்குகளும் நீதிபதி ஆதிகேசவலு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், அவதூறு வழக்குகளில் தனி நபர்களை விமர்சித்தார்களா, அவர்களின் அரசுப் பணியை விமர்சித்தார்களா என்பது கீழமை நீதிமன்ற விசாரணைக்கு பிறகு தான் முடிவெடுக்க முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தனி நபர்கள். அமைச்சர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பணி செய்வதால் அவர்களை விமர்சித்தால், அவர்கள் வகிக்கும் பொறுப்பை விமர்சித்ததாகவும், அரசை விமர்சித்ததாகவும் தான் கருத்தில் கொள்ள முடியுமென வாதிட்டார்.
 

சில அவதூறு வழக்குகளில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவை பதிவு செய்த நீதிபதி, பதில்மனு தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி மாதம், 2-வது வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

 

சார்ந்த செய்திகள்