Skip to main content

இடிந்து விழும் மீனவர் குடியிருப்புகள் கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம்..!

Published on 11/08/2018 | Edited on 27/08/2018
vembar


மீன்பிடித்தொழிலும், பனை ஏறும் தொழிலையும் பிரதான தொழிலாகக் கொண்ட தூத்துக்குடி வேம்பார் வடக்கு ஊராட்சியில் அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட மீனவக் குடியிருப்புகள் அடிக்கடி சுவர் காரைகள் இடிந்து விழ, உயிர் பயத்தில் வீட்டிற்குள் செல்லாமலே வாசலிலேயே பொழுதைக் கழிக்கின்றனர் மீனவ மக்கள்.
 

vembar


சுமார் 60க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள், 300க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கொண்டு தொழில் செய்து வரும் மீனவ மக்களுக்கு 2003ம் ஆண்டு தமிழ்நாடு மீன்துறை மூலம் 100க்கும் அதிகமான தொகுப்பு வீடுகள் கொண்டு குடியிருப்புக்கள் கட்டப்பட்டு மீனவ மக்களிடம் கையளிக்கப்பட்டது. 15 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட வீடுகள் தற்பொழுது உறுதித்தன்மை இழந்து அனைத்துப் பக்க சுவர்களிலும் விரிசல் விழுந்து, மேற்கூரைப் பகுதியிலுள்ள காரைகள் இடிந்து விழ, கம்பிகள் உறுத்தலாய் வெளியே நீட்டித் தெரிகின்றது. அடிக்கடி விழும் மேற்சுவரால் சமீபத்தில் மீனவர் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டு சாயல்குடி மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியுள்ளனர் குடியிருப்பு மக்கள். இது குறித்து வேம்பார் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணாப் போராட்டம் நடத்தியும் மசியவில்லை மாவட்ட நிர்வாகம்.
 

vembar

 

 

 

"எத்தனை மனுக்கள் மாவட்ட நிர்வாகத்திற்குக் கொடுப்பது..? ஒவ்வொரு முறை மனுக்கள் கொடுக்கும் போதெல்லாம் அப்பொழுது மட்டும் குடியிருப்புக்களைப் பார்வையிட்டு புகைப்படங்களை எடுத்து செல்கிறார்கள் அதிகாரிகள். அதன் பின் அவ்வளவு தான். எந்த நடவடிக்கையும் இல்லை. மறுபடி மனுக் கொடுத்தால் முன் எவ்வாறு நடந்ததோ.? அவ்வாறே குடியிருப்புக்களைப் பார்வையிட்டு புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர். வீடிருந்தும் பயன்படுத்த முடியாத நிலை.! எங்கள் உயிர் மேல் அக்கறை இல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு.!" என கொதிக்கின்றனர் வேம்பார் மீனவர்கள். கருனை காட்டுமா மாவட்ட நிர்வாகம்.?

 

சார்ந்த செய்திகள்