ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வியால் மன உளைச்சல்களுக்கு ஆளாகியிருக்கிறது மத்திய பாஜக அரசு. குறிப்பாக, பிரதமர் மோடியையும் , பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷாவையும் தூங்கவிடவில்லை.
இந்த சூழலில், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநில விவசாயிகளின் ஒட்டுமொத்த கடனையும் தள்ளுபடி செய்தது அம்மாநிலங்களின் காங்கிரஸ் அரசு. மோடிக்கும் பாஜகவுக்கும் இதனை உணர்த்த நினைத்த ராகுல்காந்தி, " ஆட்சி அமைத்த 6 மணி நேரத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்" என்று பெருமிதமாகப் பேசியிருக்கிறார்.காங்கிரஸ் முதல்வர்களின் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு பாஜகவுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை சமாளிக்க, அசாம் மாநில விவசாயிகளின் 600 கோடி கடனை அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது அசாம் மாநில பாஜக அரசு.
அசாமில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி அரசுகள், அம்மாநிலங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளன. இதனால் 'விவசாயிகளின் நண்பன் காங்கிரஸ் ' என்ற தோற்றம் தேசிய அளவில் உருவானது. இதனை ஜீரணிக்க முடியாத பாஜக தலைவர்கள், அசாம் மாநில விவசாய கடன் விவகாரத்தை கையில் எடுத்தனர். அசாம் அரசுக்கு சில உத்தரவுகள் டெல்லியிலிருந்து பிறப்பிக்கப்பட்டது. உடனே, தனது அமைச்சரவையை கூட்டி ஆலோசித்தார் அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால். அந்த ஆலோசனையில் விவசாயிகளின் 600, கோடி கடனை தள்ளுபடி செய்வதாக முடிவெடுக்கப்பட்டது.
அசாம் அரசின் இந்த முடிவினை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சந்திர மோகன் போதோவாரி நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.
மேலும், கிசான் கிரெடிட் கார்டு மற்றும் பி.எஸ்.யூ. வங்கிகளில் பெற்ற விவசாய கடன்களும் இந்த தள்ளுபடி உத்தரவிற்குள் வருவதாகவும் தெரிவித்தார் அவர். 600 கோடி ரூபாய் அளவுக்கான கடன் தள்ளுபடியால் 8 லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள்.
ஒரு விவசாயி அதிகபட்சம் 25,000 ரூபாய் வரையிலான கடன் தள்ளுபடியை இதன் மூலம் பெறுவாற் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
"தமிழக விவசாய சங்கத்தினர் டெல்லியை முற்றுகையிட்டு நீண்ட நாட்களாக எத்தனையோ வழிகளில் போராட்டங்கள் நடத்தியும் பயப்படாத பிரதமர் மோடியை, தேர்தல் தோல்வியும் காங்கிரசின் அதிரடி அறிவிப்பும் பயமுறுத்தியுள்ளது. அந்த பயம்தான் அசாம் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வைத்துள்ளது" என்கிறார்கள் விவசாய சங்கத்தினர்.