இந்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் வேலுச்சாமி, நேற்று (21.12.2021) டெல்லியில் உள்ள ரயில்வே துறை வாரியத்தலைவர் சுனீத் சர்மாவை சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, “கோயம்புத்தூர் முதல் பழனி வழியாக திண்டுக்கல் ரயில் பாதையில் பத்துக்கும் மேற்பட்ட சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்படுவதைத் தவிர்க்கும் விதமாக நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், மயிலாடுதுறையில் இருந்து திண்டுக்கல் வரை செல்லும் ரயில் சேவையை செங்கோட்டை வரை நீட்டித்து இயக்க வேண்டும். திண்டுக்கல்லிலிருந்து கோவை வரை பழனி வழியாக பகல் நேர ரயில் இயக்க வேண்டும். இதன்மூலம் பொதுமக்களும் வியாபாரிகளும் பயனடைவார்கள்.
கோவை – மதுரை - திருநெல்வேலி வரை கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, பழனி வழியாக புதிய ரயில் இயக்க வேண்டும். ராமேஸ்வரம் முதல் அஜ்மீர் செல்லும் ரயிலை மதுரை வழியாக இயக்க வேண்டும். கோவை - நாகர்கோவில் வரை பொள்ளாச்சி, பழனி, மதுரை வழியாக புதிய பகல் நேர ரயில் இயக்க வேண்டும். கோவை – மதுரை, கோவை – ராமேஸ்வரம், கோவை – தூத்துக்குடி, கோவை - கொல்லம் ரயில்களைக் கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியே செல்லும் அகல ரயில் பாதை வழியாக இயக்க வேண்டும்.
கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ரயில் நிலையங்களைப் பாலக்காடு கோட்டத்திலிருந்து மதுரை கோட்டத்திற்கு மாற்ற வேண்டும். திருநெல்வேலி முதல் தாதர் வரை மதுரை, பழனி, பொள்ளாச்சி, மங்களூர் வழியாக புதிய வாராந்திர ரயில் இயக்க வேண்டும். மதுரை – புனலூர் செல்லும் ரயிலை திண்டுக்கல் வழியாக வேளாங்கன்னி வரை நீட்டிக்க வேண்டும்.
கோவை - சென்னை எழும்பூர் வரை போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக புதிய ரயில் இயக்க வேண்டும். பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயிலை போத்தனூர், பொள்ளாச்சி, மதுரை வழியாக கோவை - திருச்செந்தூர் ரயிலாக இயக்க வேண்டும். வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படும் நாகர்கோவில் - மும்பை விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும். சென்னை - ஐதராபாத் செல்லும் ரயிலை திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.
பழனி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல், கொடைரோடு ஆகிய ரயில் நிலையங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும். பழனியிலிருந்து ஈரோடுக்கு அகல ரயில் பாதை அமைக்க வேண்டும். மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்ல வேண்டும். சத்திரப்பட்டி, ஆயக்குடி, தாழையூத்து ஆகிய இடங்களில் உள்ள ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.