சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் நடை திறக்கும் ஒவ்வொரு மாதமும் தமிழக பக்தர்கள் அதிகமாக சென்று வருகின்றனர். இதில் மார்கழி மாதம் முதல் தை மாதத்திலேயே அதிகமான பக்தர்கள் செல்கிறார்கள்.
இதற்காக கார்த்திகை மாதம் தொடக்கத்திலேயே தமிழக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள். 48 நாட்கள் வரை விரதம் இருந்து கோயிலுக்கு செல்வது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் மாலை அணிந்துள்ள பக்தர்கள் விரதம் இருக்கிறார்கள்.
இந்தநிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு மிகக் குறுகிய நாட்களே உள்ளதால் மாலை அணிந்துள்ள வேட்பாளர்கள் மட்டுமின்றி வாக்காளர்களும் டிசம்பர் கடைசியில் செல்ல திட்டமிட்டிருந்தாலும் 10 நாட்களுக்கு முன்னதாகவே கோயிலுக்கு புறப்பட்டுவிட்டனர்.
அதாவது உள்ளாட்சித் தேர்தலில் அளிக்க வேண்டிய வாக்குகள் முக்கியம் என்பதால் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாக செல்வதாக கூறும் புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு பகுதி பக்தர்கள் முக்கரை விநாயகர் ஆலயத்தில் இருமுடி கட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்றனர். இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் செல்கின்றனர்.