
ஜேடர்பாளையத்தில் திடீர் திடீரென்று நிகழும் தீ வைப்பு சம்பவங்களைத் தொடர்ந்து 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டும், மீண்டும் மர்ம நபர்கள் வாழை, பாக்கு மரங்களை வெட்டிச் சாய்த்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த ஜேடர்பாளையம் அருகே உள்ள வீ.கரப்பாளையத்தைச் சேர்ந்த விவேகானந்தன் மனைவி நித்யா (28). இவர், கடந்த மார்ச் 11ம் தேதி, அதே பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அன்று மாலை அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றாலும், இந்த சம்பவத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், ஒரே நபர் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டிருக்க முடியாது என்றும் நித்யாவின் குடும்பத்தினர் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.
இதையடுத்து நித்யாவின் கொலைக்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர், தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த கொலையின் தொடர்ச்சியாக அந்த கிராமத்தில் இரு பிரிவு சமூகத்தினருக்கு இடையே மோதல் அபாயம் உருவாகி உள்ளது. அதேநேரம், அந்த இரு பிரிவினரில் ஒரு பிரிவினர் நடத்தி வரும் கரும்பு ஆலைகளில் வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வருவதால், அவர்களால்தான் நித்யா படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
இதையடுத்து, திடீர் திடீரென்று மர்ம நபர்கள் சிலரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுச் செல்வதும், குடியிருப்புக்கு தீ வைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மே 13ம் தேதி அப்பகுதியில் கரும்பாலை நடத்தி வரும் எம்ஜிஆர் என்கிற முத்துசாமி என்பவருக்குச் சொந்தமான ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகளால் வேயப்பட்ட கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் அந்த கொட்டகைக்குள் தூங்கிக் கொண்டிருந்த நான்கு வடமாநிலத் தொழிலாளர்கள் தீக்காயம் அடைந்தனர். அவர்களுக்கு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராகேஷ் (19) என்ற ஒடிசா இளைஞர் மே 17ம் தேதி அதிகாலை உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தால் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவலால் ஏடிஜிபி சங்கர், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், சேலம் சரக எஸ்பிக்கள் தலைமையில் 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், வீ.கரப்பாளையம், புதுப்பாளையம், சரளைமேடு கிராமங்களில் குவிக்கப்பட்டனர். அங்கு புதிதாக 17 சோதனைச்சாவடிகளை காவல்துறையினர் அமைத்துள்ளனர். சந்தேகத்திற்குரிய நபர்கள் யார் வந்தாலும் அவர்களை விசாரித்த பிறகே கிராமத்திற்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.
இத்தனை பந்தோபஸ்து, கண்காணிப்பு இருந்தும் மர்ம நபர்கள் சிலர் மே 17ம் தேதி நள்ளிரவுக்கு மேல் ஜேடர்பாளையம் - கரப்பாளையம் சாலையில் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் உள்ள வாழை தோப்புக்குள் புகுந்து அங்குள்ள 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், பாக்கு மரங்களை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். மே 17ம் தேதி நள்ளிரவுக்கு மேல் இந்த சம்பவம் நடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகேசன் காவல்துறையில் புகார் அளித்தார். மாவட்ட எஸ்.பி கலைச்செல்வன் நிகழ்விடத்தை நேரில் பார்வையிட்டு விசாரித்து வருகின்றார்.
கரும்பாலை நடத்தி வரும் எம்ஜிஆர் என்கிற முத்துசாமியின் மருமகன்தான் இந்த முருகேசன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை குறிவைத்து மர்ம நபர்கள் தாக்கி வருவது தெரிய வந்துள்ளது. எனினும், இந்த சம்பவத்திலும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. காவல்துறை தரப்பில் பெரும் படையே களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ள நிலையில், மர்ம நபர்களின் அட்டகாசம் தொடர்வதால் ஜேடர்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது.