ஊட்டச்சத்து மற்றும் உளவியல் நிபுணர் கிருத்திகா தரன், மன ரீதியாக உடலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ‘உணவும் உணர்வும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் பி.சி.ஓ.டி பிரச்சனை குறித்து தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
இப்போது 18 முதல் 32 வயதுடைய நிறையப் பெண்களுக்கு பி.சி.ஓ.டி பிரச்சனை இருக்கிறது. உணவு, உடல், மனது சார்ந்து இந்த பி.சி.ஓ.டி பிரச்சனைகள் வரும். ஆரோக்கியமான உணவு உட்கொள்ளவில்லை என்றால் உடலில் இன்சுலின் பிரச்சனையை உருவாகும். இன்சுலின் பிரச்சனை வரும்போது ஹார்மோன்கள் தாறுமாறாக மாற்றம் அடைய வாய்ப்பு இருக்கிறது. ஹார்மோன் மாறும்போது ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் மாற்றம் அடையும். அதனால் பெண்களின் வயிற்றில் உள்ள கருமுட்டை சிதைந்து மாதவிடாயில் சிக்கலை ஏற்படுத்தும். இது வெறும் வயிற்றில் ஏற்படும் பிரச்சனை மட்டுமில்லை இது மூளையுடனும் தொடர்புடையது.
என்னிடம் கவுன்சிலிங் வந்த ஒரு பெண்ணின் வீட்டில் டாக்டருக்கு படிக்கச் சொல்லியிருக்கின்றனர். ரொம்ப நன்றாகப் படிக்கும் அவருக்கு நீட் தேர்வு எழுதியும் டாக்டர் சீட் கிடைக்கவில்லை. அந்த பெண்ணுக்கு பெரிதாக மருத்துவர் கனவு இல்லாதபோதும், பெற்றோர்கள் தொடர்ச்சியாக இந்த விஷயத்தில் அழுத்தம் கொடுத்துள்ளனர். அதனால் அவருக்கு அந்த பென்ணுக்கு மனதளவில் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. அந்த அழுத்தத்தால் பி.சி.ஓ.டி, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் அவருக்கு வந்துள்ளது. என்னை சந்திக்க அந்த பெண் வந்தபோது 90 கிலோ எடையில் இருந்தார்.
உடல் பருமன் அதிகமாக அந்த பெண்ணுக்கு வேறு சில ஸ்கின் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு தன்னுடைய அழகான தோற்றத்தை இழந்துள்ளார். இது அவரால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிக்கு மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பின்பு நான், அந்த பெண்ணுக்கு உணவு பழக்கவழக்கத்தில் சில மாற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லியதோடு ப்ரீபயோடிக் உணவுகளைப் பரிந்துரைத்தேன். அதே போல் ப்ரோபயோடிக்கான சில மருந்துகளை எடுத்துக்கொள்ளச் சொன்னேன். அதோடு சேர்ந்து அவருக்குப் பிடித்த ஹாக்கி ஸ்போர்ட்ஸை விளையாடச் சொன்னேன். காரணம் பிடித்ததைச் செய்யும்போது ஆக்சிடோசின் டோபமைன் மற்றும் எண்டார்பின் செரோடினின் போன்ற ஹார்மோன் சமநிலை அடையும்.
ஒரு பக்கம் உணவு, விளையாட்டு, கவுன்சிலிங் என உணவு, உடல், மனது தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி வந்ததால் இயற்கையாக கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண்ணுக்கு பி.சி.ஓ.டி பிரச்சனை சரியாக ஆரம்பித்தது. பின்பு அந்த பெண் என்னை சந்திக்க வந்து பெற்றோரின் கனவான டாக்டர் கனவைத் தொடர ஆசைப்படுகிறேன் என்றார். பின்பு நான் முடிந்துபோன விஷயத்தை மீண்டும் துரத்துவது தேவையற்ற விஷயம் உனக்கான புதிய இலக்கை தேர்ந்தெடுத்து அதை நோக்கி பயணித்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என ஆலோசனை வழங்கினேன் என்றார்.