சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "புதுச்சேரி- சென்னை இடையே நாளை (19/11/2021) காலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும். அதிகாலை 03.00 மணி முதல் 06.00 மணி வரை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும். சென்னைக்கு 100 கி.மீ., புதுச்சேரிக்கு 120 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டுள்ளது.
வடதமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் போது 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது; அதேசமயம், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு, கடலூர், அரியலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.