அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கூட்டமைப்பினர் ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகையினை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் 7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும். அயர் பணி ஆசிரியர்கள் ஆங்காங்கே உள்ளவர்களை உள்ளெடுப்பு செய்ய வேண்டும். தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு பதிவு உயர்வுகளை உடனே வழங்கிட வேண்டும். ஆசிரியர்களுக்கான அனைத்து பணி ஓய்வு பண பயன்களை ஓய்வு பெறும் நாள் அன்றே வழங்க வேண்டும். தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வராஜ், டொனால்ட் ரோஸ், பரணி மற்றும் கூட்டமைப்பு தலைவர்கள் பேராசிரியர்கள் அசோகன், செல்லபாலு, ஜான் கிருஷ்டி, பாலமுருகன், தனசேகரன், ராஜேந்திரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
பல்கலைக்கழக வளாகத்தில் வரும் திங்கள்கிழமை கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொள்கிறார். இந்த நிலையில் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.