சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக நிற்பேன் என கூறினேன். வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம்.
சில கட்சிகள் மதத்தை வைத்து, போராட்டங்களை தூண்டுகின்றன. மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். நான் பாஜகவின் ஊதுகுழல், பாஜக என் பின்னால் உள்ளது என கூறுகிறார்கள். பாஜகவின் ஊதுகுழல் என சில ஊடகவியலாளர்களே, பத்திரிகையாளர்களே கூறுவது வேதனை தருகிறது; என் பின்னால் பாஜக இருப்பதாக கூறுகிறார்கள்; ஆனால் என்ன உண்மையோ அதை நான் கூறுகிறேன்.

சிஏஏ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு சட்டமாக்கப்பட்டுவிட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் திருமபப் பெறப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்ன போராடினாலும் மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப்பெறாது என நினைக்கிறேன்;
டெல்லி வன்முறையை கட்டுப்படுத்தாத மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். ட்ரம்ப் போன்ற தலைவர் வரும் நேரத்தில் போராட்டத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். என்.ஆர்.சி. குறித்து மத்திய அரசு தெளிவாக கூறிய பிறகும், குழப்பம் எதற்கு?
டெல்லி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கவில்லை; என்றால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படும். இது போன்ற போராட்டங்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். டெல்லி போராட்டங்கள் மிகவும் அதிகமாக போய் கொண்டிருக்கிறது; அமைதி வழியில் போராட்டம் செய்யலாம்; ஆனால் வன்முறைக்கு இடம் கொடுக்கக்கூடாது. டெல்லியில் வன்முறை ஒடுக்காவிட்டால் பதவி விலகுங்கள்." இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.