சேலத்தில், மான் கொம்பை பதுக்கி வைத்திருந்ததாக நகைக்கடை அதிபர் உள்ளிட்ட 5 பேருக்கு அபராதம் விதித்த வனத்துறை அதிகாரிகள், சப்ளை செய்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
சேலத்தில் புலி பல், புலி நகம், யானை தந்தம், நரி வால், நரி பல், மான் கொம்புகள் மூலம் ஆபரணங்கள் செய்து விற்பனை செய்யப்படுவதாக சென்னையில் உள்ள வனத்துறை கண்காணிப்புக்குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னையில் இருந்து வனத்துறை ஏ.சி.எப். மகேந்திரன் தலைமையிலான ஒரு குழுவும், சேலம் தெற்கு வனச்சரகர் சின்னத்தம்பி தலைமையிலான ஒரு குழுவும் சேலத்தில் உள்ள நகைக்கடைகளில் சில நாள்களுக்கு முன்பு திடீர் சோதனையில் இறங்கினர்.
சேலம் பஜார் தெருவில், உள்ள ஒரு நகைக்கடையில் 2 மான் கொம்பு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதே பகுதியில் வேறு சில நகைக்கடைகளில் சோதனை நடத்தியபோது சில துண்டுகள் சந்தனக்கட்டை, புலி நகங்கள், மேலும் ஒரு மான் கொம்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து நகைக்கடை அதிபர் மோகன் காந்தி, நந்து சேட் என்கிற நந்தகுமார், செந்தில், வெங்கடேஷ் பிரபு, ஆபரண கல் வியாபாரம் செய்து வரும் குமரேசன் ஆகியோரை வனத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர்.
இவர்களுக்கு குமரேசன்தான் மான் கொம்புகளையும், புலி பல், புலி நகங்களையும் விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. அவர், சேலம் பஞ்சந்தாங்கி ஏரி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஜெயமந்திரி என்கிற அரவிந்த் என்பவரிடம் வாங்கியிருப்பது தெரிய வந்தது. நந்து சேட் என்கிற நந்தகுமார் கடையில் இருந்து கைப்பற்றப்பட்ட 5 புலி நகங்களும் போலியானவை என்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேநேரம் அவருடைய கடையில் இருந்து 1.77 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வெங்கடேஷ்பிரபு, செந்தில் ஆகியோரிடம் இருந்து உடைந்த மான் கொம்பு துண்டுகள் கைப்பற்றப்பட்டன. இதற்காக இவர்கள் இருவருக்கும் தலா 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் விலங்கு பொருள்களை கடைக்காரர்களக்கு விற்பனை செய்த குமரேசனுக்கும், சந்தன கட்டைகளை பதுக்கி வைத்திருந்த நந்தகுமார் ஆகியோருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், மான் கொம்பை நகைக்கடையில் பதுக்கி வைத்திருந்த மோகன்காந்திக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அட்டவணைப்படுத்தப்பட்ட விலங்குகளின் பொருள்களை விற்பனை செய்ததாக ஜெயமந்திரி என்கிற அரவிந்த் கைது செய்யப்பட்டார்.