திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே காரக்காட்டு குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கவிதா. 30 வயதாகும் இவர் வெள்ளிக்கிழமை மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த ஆரம்பாக்கம் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கவிதாவின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கவிதா வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவர் தனது கணவருக்கு எழுதிய கடிதம் சிக்கியது.
அந்தக் கடிதத்தில், அன்புள்ள கணவருக்கு, உங்கள் அன்பு மனைவி கவிதா எழுதிக்கொள்வது. எனக்கு வாழ விருப்பம் இல்லை. நான் பைத்தியக்காரி போல் இருக்கிறேன். நம்முடைய 2 குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும். குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். என்னுடைய கடைசி ஆசை, நீங்கள் நல்ல பெண்ணை திருமணம் முடித்து கொள்ளுங்கள். நான் ஒரு கோழைத்தனமான முடிவை எடுத்து உள்ளேன்.
அம்மா என்னை மன்னித்து விடு. அப்பா இல்லாத வேதனையை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவரோடு நானும் போக முடிவு எடுத்து விட்டேன். யாரோ என்னை கூப்பிடுவது போல இருக்கிறது. என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் என உருக்கமாக எழுதியிருந்தார்.
கவிதாவின் கணவர் ராஜ்குமார் டாஸ்மாக் ஊழியராக இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கவிதாவின் அப்பா ராஜூ 3 மாதத்திற்கு முன்பு மாரடைப்பால் இறந்தார்.