
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த விருத்தகிரிக்குப்பத்தில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள முதனை, பெரியகாப்பான்குளம், சின்னகாப்பான்குளம், இருப்பு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, துணை மின் நிலையத்திலிருந்து இருப்பு கிராமத்திற்குச் செல்லும் உயர் மின்னழுத்தப் பாதைக்கு கீழே விருத்தகிரிக்குப்பம் கிராமப் பகுதிக்குச் செல்லும் வீட்டு உபயோக மின் பாதையில் மின்சாரத்தை நிறுத்தாமல் பணிகள் நடந்து வந்தது. இதனால், உயர் மின்னழுத்தப் பாதை கம்பியானது தாழ்வாகச் சென்ற மின்கம்பிகளில் உரசியது. இதனால் உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு பயங்கரச் சத்தத்துடன் தீப்பொறிகள் பறந்து புகைமூட்டம் ஏற்பட்டது.
அப்போது வீடுகளில் பயன்பாட்டில் இருந்த 50 டிவி, 25 மிக்ஸி, 15 கிரைண்டர், 100 ஃபேன், 2 பிரிட்ஜ் மற்றும் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த செல்ஃபோன்கள், பல்புகள், எல்.இ.டி பல்புகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மின்சாதனப் பொருட்கள் வெடித்துச் சிதறின. இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பணியில் ஈடுபட்டிருந்த மின்பொறியாளரிடம் சென்று கேட்டபோது உரிய பதில் கூறாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சேதமடைந்த மின்சாதன பொருட்களுடன் திரண்டு சென்று மின்வாரிய ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து உரிய இழப்பீடு கேட்டும் அலட்சியமாகச் செயல்படும் மின்சார வாரிய அதிகாரிகளைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி, மின்சாதனப் பொருட்களை சாலையில் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.