பொங்கல் பண்டிகையின்போது பெரும்பாலான வீடுகளில் மண் பானையில் பொங்கல் வைத்து படையலிட்டு, சூரியனுக்கும், தங்கள் விவசாய வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும் படையலிட்டு வழிபடுவார்கள். பொங்கல் தினத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே மண்ணால் மண்பாண்டங்கள் செய்யப்பட்டு அவைகளை வெயிலில் நன்கு காயவைத்து பிறகு நெருப்பு சூளையில் அடுக்கி வைத்து சுடப்பட்டு விற்பனை செய்யப்படும். இப்படி தயாரிக்கப்பட்ட புதுப்பானை புது அடுப்புகளை வாங்கி செல்வார்கள். அதில் வைத்தே பொங்கல் இடுவார்கள்.
கடலூர் மாவட்டத்தில், கடலூர் சாவடி மற்றும் பெண்ணாடம் திருவட்டத்துறை போன்ற பல பகுதிகளில் மண் பாண்டங்கள் உற்பத்தி செய்து அதை சூளையில் வைத்து சுட்டு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இதற்காக டிசம்பர், ஜனவரி மாத துவக்கத்திலேயே மண்பானைகள் உற்பத்தியை துவக்கிவிடுவார்கள். ஆனால், கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக புயல், தொடர் மழை என தொடர்ந்து இயற்கை இடர்பாடுகளுக்கு உள்ளாகிவருவதால், இந்த மண் பாண்ட தொழிலுக்கு தேவையான மண் சேகரிப்பதிலும் அதை பொருட்களாக தயார் செய்து காய வைக்க அதற்கான வெயிலும் சுத்தமாக அடிக்கவில்லை.
அதற்காக சேகரிக்கப்பட்ட மண்ணும் மழையில் கரைந்து போய்விட்டன. இதனால், மண்பாண்டங்களை உற்பத்தி செய்ய முடியாமல் மண்பாண்டத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 9 மாதங்களாக கரோனா நோய் பரவல் காரணமாக மண்பாண்ட உற்பத்தி நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கு தளர்வினால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவையான மண் பாண்டங்கள், அடுப்புகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் தங்கள் குடும்பத்தின் வறுமையில் இருந்து மீளலாம் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கனவு கண்டு கொண்டிருந்தனர்.
அவர்கள் கனவிலும் எண்ணத்திலும் மழையின் காரணமாக மண் விழுந்துவிட்டது. இதனால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்கிறார்கள் மண் பாண்டத் தொழிலாளர்கள். இதனால், வறுமை எங்கள் குடும்பங்களில் தாண்டவமாடுகிறது என்று வேதனையுடன் கூறுகின்றனர்.